தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத பல ஹிட் பாடல்களை கொடுத்த முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் இளையராஜா. 1976-ம் ஆண்டு வெளியான அன்னக்கிளி என்ற படத்தின் மூலம் தனது இசை பயணத்தை தொடங்கிய இளையராஜா, அதன்பிறகு 90-களின் இறுதிவரை பல முன்னணி நடிகர்கள் மட்டுமல்லாமல் புதுமுக நடிகர்களின் படங்களுக்கும் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.
படத்தின் கதை திரைக்கதை என எதுவும் பாக்காமல் இசை இளையராஜாவாக இருந்தால் அந்த படம் வெற்றிப்படம் தான் என்று விநியோகஸ்தர்கள் நம்பிய காலங்களும் உண்டு. மேலும் இவரின் இசைக்காக தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் வரிசை கட்டி காத்திருந்த காலங்களும், படம் சரியில்லை என்றாலும் தனது பாடல்கள் மூலம் அந்த படத்தை வெற்றிப்படமாக மாற்றும் திறமையும் இளையராஜாவுக்கு உண்டு.
கிராமம் சார்ந்த கதை, நகரம் சார்ந்த கதை என எதுவாக இருந்தாலும அதற்கு தகுந்தார்போல் இசையமைத்து பல பாடல்களை கொடுத்துள்ள இளையராஜா இன்னும் தனது பாடல்களம் மூலம் பலரையும் தூங்க வைத்துக்கொண்டிருக்கிறார் என்றே சொல்லலாம். இப்படி இளையராஜாவின் பெருமைகளை அடுக்கிக்கொண்டே போனாலும் அவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்த நிகழ்வு அவ்வளவு சாதாரணம் இல்லை.
சகோதரர்களுடன் இசை நிகழ்ச்சி நடத்திக்கொண்டு சினிமாவில் இசையமைப்பாளராக வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த இளையராஜாவுக்கு ஜெமினி பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்த ஒரு படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுதான் அவருக்கு முதல் படம். அவர் கொடுத்த டியூன்கள் ஓகே செய்யப்பட்டு மறுநாள் ரெக்கார்டிங் என சொல்லப்பட்டுள்ளது. இதனால் சந்தோஷமான இளையராஜா அடுத்த நாள் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு ரெக்கார்டிங் தியேட்டருக்கு சென்றுள்ளார்.
அப்போது திடீரென நீங்கள் கொடுத்த மெட்டு எங்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் இந்த படத்தில் இருந்து உங்களை தூக்கிவிட்டோம் வேறு ஒருவர் இப்போது இசையமைக்கிறார் என்று கூறியுள்ளது. இதை கேட்டு உடைந்துபோன இளையராஜா பழையபடி தனது சகோதரர்களுடன் இணைந்து இசை நிகழ்ச்சியை நடத்தி வந்துள்ளார். அதன்பிறகு 5 வருடங்கள் கழித்து அன்னக்கிளி படத்தில் வாய்ப்பு கிடைத்து தமிழ் சினிமாவை தனது இசையால் கட்டி ஆண்டு வருகிறார் இளையராஜா. அவரின் முதல் படத்தின் வாய்ப்பு பறிபோனது தொடர்பான காட்சி முகவரி படத்தில் அஜித்துக்காக இயக்குனர் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“