இந்த படம் ஓடவில்லை என்றால் நான் இசையமைப்பதை நிறுத்திவிடுகிறேன் என்று இளையராஜா நடிகர் ரஜினிகாந்திடம் சபதம் போட்டதாக இசையமைப்பாளர் கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.
Advertisment
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் இளையராஜா. ரஜினி கமல் என முன்னணி நடிகர்கள் மட்டுமல்லாமல் தனது இசையின் மூலம் பல நடிகர்களை முன்னணி நட்சத்திரங்களாக மாற்றியவர். இப்போது பல இளம் இசையமைப்பாளர்கள் பல வெற்றிகளை கொடுத்து வந்தாலும் அவர்களுக்கு இணையாக இப்போதும் பல படங்களுக்கு இளையராஜா இசையமைத்து வருகிறார்.
இதனிடையே ரஜினிகாந்த் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் ஒரு படத்தின் கதையில் நம்பிக்கை இல்லை என்றும், இதனால் படத்தில் இருந்து விலகுவதாக கூறியதாகவும், அதற்கு இளையராஜா இந்த படம் கண்டிப்பாக ஓடும். அதற்கு நான் பொறுப்பு. அப்படி படம் ஓடவில்லை என்றால் நான் இந்த ஹார்மோனியத்தை தொடவே மாட்டேன் என்று சபதம் போட்டதாக இயக்குனரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் பங்கேற்ற கங்கை அமரனிடம், முன்னணி இயக்குனராக இருந்தும் நீங்கள் ஏன் ரஜினி கமல் படங்களை இயக்கவில்லை என்று கேட்டபோது, ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ராஜாதிராஜா படம் எங்கள் கதைதான். ஆனால் அண்ணன் (இளையராஜா) இந்த படத்தை ஆர்,சுந்தர்ராஜன் இயக்கட்டும் என்று வாக்கு கொடுத்துவிட்டார்.
Advertisment
Advertisements
இந்த கதையில் நடித்த ரஜினிகாந்த் சில நாட்கள் ஷூட்டிங் முடிந்த பிறகு படத்தின் கதையில் எனக்கு நம்பிக்கை இல்லை சாமி. படத்தில் இருந்து விலகிவிடலாம் என நினைக்கிறேன் என்று கூறினார். ஆனால் அண்ணன் அப்படியெல்லம் சொல்லாதீங்க சாமி இந்த கதை கண்டிப்பாக வெற்றி பெறும் நீங்கள் தைரியமாக நடியுங்கள். இந்த படம் வெற்றிபெறவில்லை என்றால் நான் ஹார்மோனியத்தை தொடுவதை விட்டுவிடுகிறேன் என்று சொன்னார்.
அதேபோல் அண்ணன் சொன்ன மாதிரி ராஜாதிராஜா படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது என்று கங்கை அமரன் கூறியுள்ளார். இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”