தமிழ் சினிமாவில், நடிகர், இயக்குனர் தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் பாக்யராஜ். இவர் இயக்கத்தில் வெளியான முந்தானை முடிச்சு திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், இந்த படத்திற்கு இசையமைக்க யாரை தேர்வு செய்வது என்பதில் பெரி பஞ்சாயத்தே நடந்துள்ளது.
இந்திய சினிமாவின் திரைக்கதை மன்னன் என்று அழைக்கப்படுபவர் பாக்யராஜ். இவர் பெரும்பாலும் தான் இயக்கிய படங்களில் தானே நாயகனாக நடித்துள்ளார். அந்த பாக்யராஜ் இயக்கி நாயகனாக நடித்து கடந்த 1983-ம் ஆண்டு வெளியான படம் முந்தானை முடிச்சு. ஊர்வசி, கோவை சரளா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்த இந்த படத்தில் இளையராஜா இசையமைத்திருந்தார். கங்கை அமரன், முத்துலிங்கம், புலமைபித்தன் உள்ளிட்டோர் பாடல்கள் எழுதியிருந்தனர்.
ஏ.வி.எம். நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. இந்த படத்தின் கதையை சொல்வதற்காக ஏ.வி.எம்.நிறுவனம் சென்றிருந்த இயக்குனர் பாக்யராஜ், அங்கு சரவணன், பாலசுப்பிரமணியன் ஆகியோரை சந்தித்து கதை கூறியுள்ளார். கதையை கேட்ட அவர்கள் ரொம்ப பிரமாதமாக இருக்கிறது என்ற சொல்லி, இந்த படத்திற்கு இளையராராஜா இசையமைத்தால் நன்றாக இருக்கும். இது கிராமத்து கதை என்பதால், அவரை இசையமைக்க வைக்கலாம் என்று கூறியுள்ளனர்.
அதே சமயம், முந்தானை முடிச்சு படத்திற்கு முன்னதாக, பாக்யராஜ் இயக்கிய சில படங்களுக்கு இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் இசையமைத்திருந்தார். அதன் காரணமாக ஒரு பெரிய படம் வரட்டும் உனக்கு இசையமைக்க வாய்ப்பு தருகிறேன். கொஞ்சம் பொறுமையாக இரு என்று பாக்யாராஜ் கூறியுள்ளார். அதன் காரணமாக முந்தானை முடிச்சு படத்தில் கங்கை அமரனை இசைமைக்க வைக்கலாம் என்று முடிவு செய்துள்ளார் பாக்யராஜ்.
பாக்யராஜூன் இந்த முடிவை கேட்ட, ஏ.வி.எம்.நிறுவனத்தினர், அவரிடம் எவ்வளவோ சொல்லியும், நான் வாக்கு கொடுத்துவிட்டேன் சாரி என்று முடித்துள்ளார். அதன்பிறகு பாக்யராஜூவை சந்தித்த கங்கை அமரன், இந்த படத்திற்கு அண்ணன் இசையமைக்கட்டும். என்று கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியான பாக்யராஜ் ஏன் என்று கேட்டபோது, ஏ.வி.எம். நிறுவனத்தில் இருந்து என்னை சந்தித்து, 2 படங்கள் தருவதாக சொன்னார்கள். அவர்கள் 2 படம் தருவதற்காக மட்டுமல்ல, அவ்வளவு பெரிய நிறுவனம் என்னை சந்தித்து பேசியது எனக்கே ஒரு மாதிரி இருக்கிறது. அதனால் இந்த படம் அண்ணன் பண்ணட்டும் என்று கூறியுள்ளார்.
வேறு வழி இல்லாமல் பாக்யராஜ் இதற்கு ஒப்புக்கொண்ட நிலையில், இளையராஜா இந்த படத்திற்கு இசையமைக்க மறுத்துள்ளார். நீங்கள் முதலில் கங்கை அமரனைத்தானே கேட்டீங்க, முதலில் என்னிடம் வரவில்லையே. போங்க கங்கை அமரனை வைத்தே இசை அமைத்துக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். அதன்பிறகு அவரிடம் பேசி, சமாதானப்படுத்தி ஒப்புக்கொள்ள வைத்துள்ளனர். முந்தானை முடிச்சு திரைப்படம் இன்றும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.