ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலில் இசையமைப்பாளர் இளையராஜாவை அனுமதிக்கவில்லை என்ற தகவல் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், "எந்த இடத்திலும் என்னுடைய சுயமரியாதையை நான் விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை" என்று இளையராஜா, விளக்கம் அளித்துள்ளார்.
இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் இளையராஜா, இன்று விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் புகழ்பெற்ற ஆண்டாள் கோயிலிலுக்கு சென்றுள்ளார். விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக இருக்கும் இந்த கோவிலில் பெரியாழ்வார் மற்றும் அவரது வளர்ப்பு மகளான ஆண்டாள் ஆகிய இரு ஆழ்வார்களின் பிறப்பிடமாக இது கருதப்படுகிறது. இக்கோயில் மதுரையிலிருந்து 80 கி.மீ தொலைவில் உள்ளது.
இந்த கோவிலுக்கு சென்ற இளையராஜா, கருவறை முன் இருக்கும் அர்த்த மண்டபத்திற்கு சென்றபோது அவரை தடுத்து நிறுத்தி, அவருக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பில் விதிமீறல்கள் இருப்பதாக ஜீயர்கள், பக்தர்கள் கூறியுள்ளனர். இதன் பின் இளையராஜா அர்த்த மண்டபத்தின் படி அருகே நின்றவாறு கோவில் மரியாதையை ஏற்று சாமி தரிசனம் செய்து சென்றார். தொடர்ந்து அர்த்த மண்டபத்தில் இருந்து இளையராஜா வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விவகாரம் குறித்து கோயில் நிர்வாகம் அளித்துள்ள விளக்கத்தில், ஆண்டாள் கோவிலில் கருவறை போலவே அர்த்தமண்டபமும் பாவிக்கப்படுகிறது. அங்கு ஜீயர்கள், பட்டர்கள் தவிர யாருக்கும் அனுமதி இல்லை. மேலும் எந்த பொது மக்களும் இதுவரை அர்த்தம் மண்டபத்திற்குள் சென்றதில்லை. ஜீயர்கள் தவிர வேறு யாருக்கும் அர்த்த மண்டபத்துக்குள் அனுமதி கிடையாது. அர்த்த மண்டபத்தில் உற்சவர் சிலைகள் நிரந்தரமாக இருப்பதால் அனுமதி கிடையாது என்று கூறியுள்ளது.
இது குறித்து அறநிலையத்துறை வெளியிட்டுள்ள விளக்கத்தில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மரபு, பழக்க வழக்கப்படி அர்த்த மண்டபம் வரை அர்ச்சகர், பரிசாரகர், மடாதிபதிகள் தவிர இதர நபர்கள் அனுமதிக்கப்படும் வழக்கமில்லை. ராமானுஜ ஜீயர் உடன் வந்த இசையமைப்பாளர் இளையராஜா, அர்த்த மண்டப வாசல் படி ஏறியபோது அங்கிருந்தே சாமி தரிசனம் செய்யலாம் என ஜீயர் கூறியதை ஒப்புக்கொண்டு அவரும் அங்கிருந்தே தரிசனம் செய்தார். ஜீயர் மட்டும் அர்த்த மண்டபத்தின் உள்ளே சென்று தரிசனம் செய்தார்" என்று கூறியுள்ளது.
என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை. நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம்.
— Ilaiyaraaja (@ilaiyaraaja) December 16, 2024
தற்போது இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இசையமைப்பாளர் இளையராஜா, என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை. நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம் என்று பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.