தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கும் இமான், தனது எக்ஸ் தளம் ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக தனது சமூகவலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த பக்கத்தில் ஏதேனும் பதிவுகள் வந்தால் அதை பொருட்படுத்த வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.
2001-ம் ஆண்டு காதல் சுவாசம் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இமான். ஆனால் இந்த படம் வெளியாகாத நிலையில், 2002-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படமே இவரது முதல் படமாக அமைந்தது, அதனைத் தொடர்ந்து, கிரி, தலைநகரம், நான் அவனில்லை, வீராப்பு, சாட்டை, கும்கி, தேசிங்கு ராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
தற்போது மலை, பக்ளிக், வள்ளி மயில் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து வரும் இமான், தனது சமூகவலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், அனைவருக்கும் வணக்கம், எனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (ட்விட்டர்) கணக்கு (@immancomposer) ஹேக் செய்யப்பட்டுள்ளது என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். ஹேக்கர் எனது கணக்குடன் தொடர்புடைய மின்னஞ்சல் மற்றும் கடவுச்சொல்லை மாற்றியுள்ளார்.
மேலும் கடந்த 24 மணி நேரத்திற்குள் பல பதிவுகளையும் வெளியிட்டுள்ளார். நான் தற்போது 'எக்ஸ்' ஆதரவைத் தொடர்பு கொண்டு எனது கணக்கை விரைவில் மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். நான் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இசைத் துறையில் இருப்பதால், எனது நம்பகத்தன்மை மற்றும் என்னைப் பின்தொடர்பவர்களுடனான தொடர்பு எனக்கு மிகவும் முக்கியமானது. ஹேக்கரால் இடுகையிடப்படும் எந்தவொரு தவறான அல்லது அங்கீகரிக்கப்படாத பதிவுகளும் என்னை அறியாமல் வருவது.
மேலும் எனது கணக்கிலிருந்து ஏதேனும் சந்தேகத்திற்கிடமான பதிவுகள் அல்லது செய்திகள் வந்தால் இப்போதைக்கு அவற்றை புறக்கணிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். எக்ஸ் (ட்விட்டர்) கணக்கை மீட்டெடுகக, உடனடி நடவடிக்கை எடுத்து எனது கணக்கை மீண்டும் பெற உதவுமாறு நான் மனதார கேட்டுக்கொள்கிறேன். இந்த நேரத்தில் உங்கள் பொறுமைக்கும் ஆதரவிற்கும் நன்றி. எனது கணக்கை மீண்டும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததும் நான் உங்களுக்குத் தெரிவிக்கிறேன் என்று இமான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.