எம்.ஜி.ஆர் உட்பட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ள சங்கர் கணேஷ் முதன் முதலில் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் வாய்ப்பு கேட்டபோது அவர், சொன்ன வார்த்தை குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் இரட்டை இசையமைப்பாளர்களை எடுத்துக்கொண்டால் அதில் சங்கர் கணேஷ்க்கு முக்கிய இடம் உண்டு. எம்.எஸ்.விஸ்வநாதனிடம் உதவியாளராக இருந்த இவர்கள் இருவருமே பல படங்களுக்கு இசையமைத்து ஹிட் பாடல்களை கொடுத்துள்ளனர். இசை உலகில் பல வித்தியாசமான பாடல்களை கொடுத்தவர்கள் தான் சங்கர் கணேஷ் என்ற இரட்டையர்கள்.
விஜயகாந்தின் ஆரம்ப கால படங்களில் இசையில் பெரும் பங்களிப்பை கொடுத்துள்ளனர்.
தற்போது சங்கர் இல்லாத நிலையில், கணேஷ் படங்களுக்கு இசையமைப்பதில் இருந்து விலகி இருக்கும் நிலையில், யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகிறார், அந்த வகையில் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் தனது முதல் சந்திப்பு குறித்து பல தகவல்களை பகிர்ந்துகொண்டார்.
நான் பள்ளியில் படிக்கும்போது, விளையாட்டு நேரத்தில், எனது தலைமை ஆசிரியர் என்னை தனியாக அழைத்து டான்ஸ் சொல்லிக்கொடுப்பார். பள்ளி ஆண்டு விழாவில், ஓ தேவதாஸ் பாடலுக்கு பெண் வேடத்தில் நடனாடினேன். அதுதான் எனது முதல் நடனம். அதன்பிறகு அவ்வப்போது வீட்டில் பாடல்கள் பாடிக்கொண்டிருப்பேன். இதை பார்த்த எனது அப்பா இவனை எம்.எஸ்.விஸ்வநாதனிடம் சேர்த்துவிட்டால் சரியாக இருக்கும் என்று நினைத்து அவரின் நண்பர் ஒருவரின் உதவியுடன் என்னை அழைத்து சென்றார்.
அங்கு எங்க அப்பா, எம்.எஸ்.வியிடம், இது என் பையன் நல்ல பாடுவான் உங்களிடம் சேர்த்தவிட்டால் நன்றாக இருக்கும் என்று சொன்னார். என்னை பார்த்த எம்.எஸ்.வி, நல்லா பாடுவியா என்று கேட்க, நானும் நல்லா பாடுவன் என்று சொன்னேன். எங்கே ஒரு பாட்டு பாடு என்று சொல்ல, நானும் ஒரு பாடலை பாடினேன். அப்போது எம்.எஸ்.வி, ராமமூர்த்தி மற்றும் அங்கிருந்த அனைவரும் சிரித்தார்கள். நாம் நல்ல பாடுகிறோம். அதனால் தான் சிரிக்கிறார்கள் என்று நினைத்து நானும் பாடினேன் .
பாடி முடித்தவுடன், என்னை அருகில் அழைத்த எம்.எஸ்.வி, நல்ல வாத்தியாரா பார்த்து நல்ல கத்துகிட்டு வந்து பாடு கௌம்பு என்று சொல்லிவிட்டார். அதன்பிறகு தான் எனக்கு தெரிந்தது, அவர்கள் நான் நன்றாக பாடுவதாக நினைத்து சிரிக்கவில்லை. நான் தப்பு தப்பாக பாடுகிறேன் என்று சிரித்திருக்கிறார்கள் என்று சங்கர் கணேஷ் கூறியுள்ளார்.
இவர்களின் முதல் சந்திப்பு இப்படி இருந்தது என்றாலும், பின்னாளில் எம்.எஸ்.வியிடம் இருந்து இசையை கற்றுக்கொண்ட சங்கர் கணேஷ் இருவரும் பெரிய இசையமைப்பாளாகளாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“