தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடல்களை கொடுத்து இன்றும், தனது பாடல்கள் மூலம் இசையுலகில் வலம் வரும் தேவா, மீண்டும் ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
1986-ம் ஆண்டு வெளியான மாட்டுக்கார மன்னாரு என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தேவா. தொடர்ந்து, மனசுக்கேத்த மகராசா என்ற படத்திற்கு இசையமைத்த இவர், 1990-ம் ஆண்டு தனது 3-வது படமாக வைகாசி பொறந்தாச்சு என்ற படத்திற்காக சிறந்த இசைமைப்பாளருக்கான மாநில அரசின் விருதினை பெற்றிருந்தார். இந்த படத்தின் பாடல்கள் காலம் கடந்து இன்றும் வரவேற்பை பெற்று வருகிறது.
அதனைத் தொடர்ந்து பல படங்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத்து முன்னணி இசையமைப்பாரளாக உருவெடுத்த தேவா, 1992-ம் ஆண்டு மட்டும் 25 படங்களுக்கு இசையமைத்துள்ளார். அதில் ஒன்று தான் ரஜினிகாந்த் நடித்த அண்ணாமலை. ரஜினிகாந்துடன் தேவா இணைந்து பணியாற்றிய முதல் படமான இந்த படத்தில் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதேபோல் இந்த படத்திற்காக தேவா போட்ட பி.ஜி.எம். தான் ரஜினிகாந்த் டைட்டில் கார்டுக்கு இன்றுவரை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அதனைத் தொடர்ந்து 1995-ம் ஆண்டு வெளியான பாட்ஷா படத்திற்கும் தேவா இசையமைத்திருந்தார். இந்த படத்தின் பாடல்கள் மட்டுமல்லாமல் பின்னணி இசையும் வரவேற்பை பெற்று இந்திய அளவில் பெரிய வெற்றிப்படங்கில் ஒன்றாக மாறியது. அதன்பிறகு அருணாச்சலம், என்ற ஒரு படத்தில் மட்டும் பணியாற்றி இருந்தார். தற்போது ஒரு சில படங்களை மட்டுமே கைவசம் வைத்திருக்கும் தேவா, ஒரு பேட்டியில் ரஜினிகாந்த் குறித்து பேசியுள்ளார்.
நான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போதும் அவரிடம் சென்று, பிளஸிங் வாங்கிக்கொண்டு தான் செல்வேன். ஆனால் அவரது படங்களுக்கு இசையமைக்க வேண்டும் என்று நான் இதுவரை கேட்டது இல்லை. அவருக்கும் அந்த ஆசை இருக்கும் தேவாவுக்கு ஒரு படம் கொடுப்போம் என்ற எண்ணம் இருக்கும் ஆனால் அங்கு சூழ்நிலை எப்படி இருக்கிறதோ என்று யோசிக்க வேண்டும். நான் பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன். ஆனால் நீங்கள் ரஜினி படத்தை மட்டும் தான் கேட்கிறீர்கள். அதனால் தான் மீண்டும் அவருடன் இணைய வேண்டும் என்று விரும்புகிறேன். விரைவில் அந்த வாய்ப்பு வரும் என்று எதிர்பார்ப்பதாக தேவா கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“