பொங்கல் தினத்தை முன்னிட்டு நாளை வெளியாக உள்ள வாரிசு திரைப்படத்தை பார்த்த இசையமைப்பாளர் தமன் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள பதிசு இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் பீஸ்ட் படத்திற்கு பிறகு தற்போது வாரிசு என்ற படத்தில் நடித்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த படம் நாளை (ஜனவரி 11) வெளியாக உள்ளது. ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பு, ஸ்ரீகாந்த், ஷாம், யோகிபாபு, ஜெயசுதா உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.
தமன் இசையமைத்துள்ள இந்த படத்தில் இருந்து ஏற்கனவே வெளியான பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில்,.கடந்த டிசம்பர் 4-ந் தேதி வெளியிடப்பட்ட வாரிசு படத்தின் டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. மேலும அஜித்தின் துணிவு படத்துடன் வாரிசு வெளியாக உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே பிரபல தெலுங்கு நடிகரான ராம்சரன் சென்னை வந்தபோது வாரிசு படத்தை அவருக்கு தயாரிப்பாளர் தில் ராஜூ காண்பித்துள்ளார். படத்தை பார்த்த ராம்சரன் சிறப்பாக வந்துள்ளதாகவும், படம் நிச்சயம் வெற்றி பெறும் என்றும் கூறியதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து தற்போது வாரிசு படத்தின் இசையமைப்பாளர் தமன் படத்தை பார்த்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், வாரிசு படத்தின் செண்டிமெண்ட் காட்சிகளை பார்த்து கண்கலங்கியதாகவும், படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை கொடுத்த தளபதி மற்றும் படக்குழுவினருக்கும் நன்றிகள் என்று பதிவிட்டுள்ளார். இந்த ட்விட்டர் பதிவு வைரலாகி வரும் நிலையில், விஜய் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக அதிரடி ஆக்ஷன் படங்களாக நடித்து வரும் விஜய் வாரிசு படத்தின் மூலம் மீண்டும் குடும்ப படத்திற்கு திரும்பியுள்ளார். பெண் ரசிகர்கள் மத்தியில் இந்த படம் நல்ல வரவேற்பை பெறும் என்றும், செண்டிமெண்ட் காட்சிகள் அனைவரையும் அழ வைக்கும் என்றும் படத்தை பற்றி படக்குழுவினர் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“