தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளைராஜா தனது இசையில் பல வெற்றிகளை கொடுத்திருந்தாலும் தனிப்பட்ட முறையில் பல பிரபலங்களுடன் மோதலில் தான் இருந்துள்ளார். 70-களில் தனது இசை பயணத்தை தொடங்கிய இளையராஜா தற்போதுவரை முன்னணி இசையமைப்பாளராக தன்னை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார்.
அதே சமயம் அவரின் பேச்சுக்கள் சில சமயங்களில் சர்ச்சை ஏற்படுத்தி கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருவது தொடர்ந்து வருகிறது. இளையராஜா இசையமைப்பாளராக கொடிகட்டி பறந்துகொண்டிருந்த காலத்தில் இயக்குனர் மணிரத்னம் தான் இயக்கிய அனைத்து படங்களுக்கும் இளைராஜாவை இசையமைப்பாளராக கமிட் செய்திருந்தார்.
இவர்கள் கூட்டணியில் வந்த தளபதி, மௌனராகம், அக்னி நட்சத்திரம், நாயகன் உள்ளிட்ட பல படங்கள் வெற்றி பெற்றது. ஆனால் ஒரு கட்டத்தில் மணிரதனம் – இளையராஜா மோதல் ஏற்பட்டதால் இருவரும் பிரிந்தனர். அதேபோல் இளையராஜா இசையில் முன்னணியில் இருந்த காலக்கடத்தில் இயக்குனர் இமயம் கே.பாலச்சந்தர் இயக்கிய பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இதில் குறிப்பாக புன்னகை மன்னன், சிந்து பைரவி உள்ளிட்ட படங்கள் பாடலுக்காக பெரிய வெற்றி பெற்ற நிலையில், இன்றைக்கும் அந்த பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. மணிரத்னம் போலவே கே.பாலச்சந்தருக்கும் இளையராஜாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இருவரும் பிரிந்துவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் ஒரு படத்தை கே.பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்திற்கு இசையமைப்பது யார் என்ற கேள்வி எழுந்தது. மணிரத்னம் பாலச்சந்தர் இருவருமே இளையராஜாவிடம் மோதலில் இருப்பதால் அவரிடம் கீபோர்டு ப்ளேயராக இருக்கும் திலீப் (ஏ.ஆர்.ரஹ்மான்) இப்போது உள்ளே வருகிறார்.
கவிதாலயா தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அந்த படம் ரோஜா. இந்த படத்திற்கு இசையமைத்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்த நிலையில், சிறந்த இசைக்காக தேசிய விருதையும் வென்றது. இதில் மற்றொரு சுவாரஸ்யம் என்னவென்றால், இளையராஜாவின் பல படங்களுக்கு பாடல் எழுதி அவருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக சரியான வாய்ப்பு இல்லாமல் இருந்த கவிஞர் வைரமுத்து ரோஜா படத்தின் அனைத்து பாடல்களையும் எழுதியிருந்தார்.
இளையராஜா இசையின் உச்சத்தில் இருந்தபோது அவர் இல்லாமல் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த முக்கிய இசையமைப்பாளர்களில் முதன்மையானவர் ஏ.ஆர்.ரஹ்மான். இதை பார்த்து பழம்பெரும் இசையமைப்பாளராக எம்.எஸ்.விஸ்வநாதன், கடவுள் எங்களுக்கு 20 வருடங்கள் கொடுத்தார். இதன்பிறகு இளைராஜாவுக்கு 20 வருடங்கள் கொடுத்தார். இப்போது ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கொடுத்துள்ளார் என்று கூறியதாக மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil