தனுஷ் இயக்கத்தில் சந்தீப், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா, எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியாகி இருக்கும் "ராயன்" படத்தின் விமர்சனம்
கதைக்களம்:
சிறுவயதில் தன் பெற்றோரை பறிகொடுத்துவிட்டு தன்னுடைய 2 தம்பிகள் மற்றும் தங்கையுடன் தன் சொந்த ஊரைவிட்டு வேறு இடத்திற்கு புறப்படுகிறார் நாயகன் காத்தவராயன் (தனுஷ்). அதன்பிறகு ஒரு பாஸ்ட் புட் கடை நடத்தி அனைவரையும் வளர்க்கிறார். எந்த வம்புக்கும் செல்லாமல் தான் உண்டு தன் வேலையுண்டு என வாழ்ந்து வரும் தனுஷின் வாழ்க்கையில் அவரது இரண்டாவது தம்பி முத்து (சந்தீப் கிஷன்) மூலம் பிரச்சனை வருகிறது. அது தனுஷுடைய குடும்பத்தை எவ்வாறு பாதிக்கிறது, அதை எப்படி தனுஷ் சமாளிக்கிறார் என்பதே மீதி கதை
நடிப்பு அரக்கன் தனுஷ் :
"துள்ளுவதோ இளமை" படத்தின் மூலம் தன்னுடைய நடிப்பு அத்தியாயத்தை தொடங்கிய தனுஷ், பல விமர்சனங்கள், உருவ கேலிகள் என அனைத்தையும் கடந்து ஒவ்வொரு கட்டங்களாக நடிப்பில் மெருகேறி இன்று "நடிப்பு அசுரன்" என மக்கள் கொண்டாடும் அளவிற்கு உழைத்து தன்னுடைய 50வது படத்தை தானே இயக்கி நடித்திருப்பதை பாராட்டாமல் இருக்க முடியாது.
நடிகர்களின் நடிப்பு
கறார் அண்ணனாக நடை, உடை, பாவனை என அனைத்திலும் வித்தியாசம் காட்டியுள்ளார் தனுஷ். ஆக்ரோஷமான காட்சிகளில் கைத்தட்டவும், எமோஷனல் காட்சிகளில் கலங்கவும் வைத்திருக்கிறார். குறிப்பாக அவருடைய Transformation காட்சிகள் எல்லாம் திரை தீ பிடிக்கும் அளவிற்கு பயங்கர மாஸாக உள்ளது. சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் ஆகிய மூவரும் மூன்று தூண்களாக கதைக்கு பலம் சேர்த்துள்ளனர். அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள கதாபத்திரத்தின் ஆழத்தை உணர்ந்து வெளிப்படுத்தியிருக்கும் நடிப்பு பிரமாதம். வில்லனாக "நடிப்பு அரக்கன்" எஸ்.ஜே.சூர்யா வழக்கம்போல தன் மிரட்டலான நடிப்பால் கவனம் ஈர்த்துள்ளார். மேலும் அபர்ணா, செல்வராகவன், சரவணன், பிரகாஷ் ராஜ் ஆகியோரின் நடிப்பும் கதையை சுவாரசியமாக நகர்த்த பயன்பட்டுள்ளது
இயக்கம் மற்றும் இசை :
பவர் பாண்டி படத்தில் மென்மையான காதலை கையாண்ட இயக்குனர் தனுஷ் இதில் ரத்தம் சொட்ட சொட்ட ஒரு பக்கா Revenge கதையை கையிலெடுத்துள்ளார். படத்தின் முதல் காட்சி முதல் இறுதி வரை தனுஷ் என்ற இயக்குனரின் உழைப்பு வெகுவாகவே தெரிகிறது. புதுமையான கதை இல்லை என்றாலும் அக்கதையை சொல்லி இருக்கும் விதத்தில் புதுமையை புகுத்தியுள்ளார். படத்தின் மற்றொரு நாயகன், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவருடைய பாடல்களும், பின்னணி இசையும் படத்தின் தரத்தை பலமடங்கு உயர்த்தியுள்ளது. குறிப்பாக அவருடைய குரலில் "உசுரே நீதானே நீ தானே" என்று ஒலிக்கும் இடத்தில் மனது கரைகிறது.
படத்தின் பிளஸ்:
துஷாரா விஜயன், சந்தீப், எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு
சுவாரசியமான கதைக்களம்
தனுஷின் இயக்கம்
இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ்
ஒளிப்பதிவு
இசைப்புயலின் பின்னணி இசை
எமோஷன் மற்றும் சண்டை காட்சிகள்
படத்தின் மைனஸ் :
யூகிக்கக்கூடிய காட்சிகள்
அதீத வன்முறை
குறிப்பு : "படத்துல Violence இல்ல Violenceல தான் படமே" என்பது போல் ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகள் பெருமளவில் உள்ளது. மொத்தத்தில், ஆக்ஷன் மற்றும் செண்டிமெண்ட் கலந்த ஒரு தரமான படம் "ராயன்"
நவீன் சரவணன்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.