தனுஷ் இயக்கி நடித்துள்ள அவரது 50வது படமாக ராயன் படம் ஜூன் 13-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஜூன் 1-ம் தேதி சென்னையில் பிரமாண்டமாக நடைபெறும் என கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் தற்போது தெலுங்கு இயக்குனரின் குபேரா படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் இயக்கி வருகிறார். பா.பாண்டி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். சன்பிடிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் தனுஷுன் 50-வது படமாகும்.
தனுஷ் எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், செல்வராகவன், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன், வரலக்ஷ்மி சரத்குமார், காளிதாஸ் ஜெயராம் மற்றும் சுந்தீப் கிஷன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். தனுஷின் 'ராயன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வட சென்னையில் நடைபெறும் கேங்ஸ்டர் கதையான இப்படம் ஜூன் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இது குறித்து தயாரிப்பாளர்கள் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. இதற்கிடையில், சேகர் கம்முலா இயக்கி வரும் மும்மொழிப் படமான 'குபேரா' படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இப்படத்தில் நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராயுடன் 'தேரே இஷ்க் மே' என்ற தலைப்பில் தயாராக உள்ள படத்தின் மூலம் தனுஷ் தனது 3-வது இந்தி படத்தில் நடிக்க உள்ளார்.
மேலும் அருண் மாதேஸ்வரனுடன் நடிகர் மற்றும் இயக்குனருமான கமல்ஹாசன் எழுதிய கதையுடன் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“