நட்சத்திர கிரிக்கெட் வீரர் "தோனி" முதன்முதலாக தயாரிக்கும் படமான எல்.ஜி.எம் "Lets Get Married"(LGM) படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று வெளியாகியிருக்கிறது. இப்படம் ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?
கதைக்களம் :
நாயகன் ஹரிஷ் கல்யானும் நாயகி இவானாவும் 2 வருடங்களாக காதலித்து வருகின்றனர். ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவெடுத்து இருவரும் தங்களுடைய பெற்றோர்களிடம் இதை சொல்கின்றனர். ஹரிஷ் கல்யானின் அம்மாவான நதியா இந்த கல்யாணத்திற்கு எந்த மறுப்புமின்றி சம்மதிக்கிறார்.ஆனால் நாயகி இவானாவோ மாமியாருடன் ஒன்றாக ஒரே வீட்டில் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதனால் அந்த கல்யாண பேச்சு பாதிலேயே நின்று விடுகிறது. இந்த குழப்பத்தை சரி செய்ய ஹரிஷ் கல்யாண் குடும்பமும், இவானா குடும்பமும் சேர்ந்து ஒரு ட்ரிப் செல்கிறார்கள். அந்த ட்ரிப்பில் இவானா தன் வருங்கால மாமியாரான நதியாவை புரிந்து கொண்டாரா? இவர்களுடைய கல்யாணம் நடந்ததா? என்பதே மீதி கதை.
நடிகர்களின் நடிப்பு :
பொதுவாகவே நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் ஹரிஷ் கல்யானுக்கு இக்கதாபாத்திரமும் அதுபோலவே ஒரு புதுமையாக அமைந்திருக்கிறது. சாக்லேட் பாய் லுக்கில் கலக்கி இருக்கிறார். ஆனால் இரண்டாம் பாதியில் இவருடைய கதாபாத்திரத்திற்கு பெரிய அளவில் வேலை இல்லை.இரண்டாம் பாதி முழுவதும் இவானா - நதியாவையே சுற்றி கதை நடப்பதால், நாயகன் இரண்டாம் பாதியில் காணாமல் போய்விடுகிறார்.
லவ் டுடே படத்திற்கு பிறகு இவானாவிற்க்கு மற்றுமொரு பேர் சொல்லும் கதாபாத்திரமாக இது அமைந்திருக்கிறது. அதை அவர் சிறப்பாக செய்திருக்கிறார். அம்மாவாக நடித்திருக்கும் நதியா முதல் பாதியில் சற்று முதிர்ச்சியாகவும், இரண்டாம் பாதியில் இளமையாகவும் காட்சிப்படுத்தியிருக்கும் விதமும், அவருடைய எதார்த்தம் நடிப்பும் ரசிக்க வைக்கிறது. யோகி பாபுவின் காமெடி காட்சிகள் ஓரளவிற்கு ரசிக்க வைக்கிறது. மேலும் ஆர்.ஜே.விஜய், வெங்கட் பிரபுவும் தங்களுடைய கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்கள்.
இயக்கம் மற்றும் இசை :
இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இன்றைய தலைமுறை நகரத்து இளம் பெண்களின் பயமாகவும், தயக்கமாகவும் இருக்கும் ஒரு பிரச்சனையை கையிலெடுத்து இருக்கும் விதம் பாராட்டுக்குரியது. இசையும் ரமேஷ் தமிழ்மணியே செய்திருப்பதால் படத்திற்கு தேவையான அளவிற்கு அது அமைந்திருக்கிறது.
படம் எப்படி :
இது போல எல்லாம் நடக்குமா? என்று ஒரு பக்கமும், இதுபோல நடந்தால் நன்றாக இருக்குமே?என்று மறுபக்கமும் யோசிக்க வைக்க கூடிய கதைக்களம். ஆனால் திரைக்கதையில் அந்த புதுமையும்,சுவாரசியமும் இல்லாமல் இருப்பது படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறது. முதல் பாதி ஒருவித எதிர்பார்ப்புடன் தொடங்குகிறது.
காதல், கல்யாணம், நகைச்சுவை,
விறுவிறுப்பான காட்சிகள் என ஒரு நல்ல படத்திற்கான அடித்தளத்தை முதல் பாதியின் முடிவு நமக்கு கொடுக்கிறது.ஆனால் இரண்டாம் பாதியில் திரைக்கதை அந்த சுவாரசியத்தை முற்றிலுமாக கெடுக்கும் வகையில் அமைந்திருப்பது ஏமாற்றமே. இரண்டாம் பாதியில் காட்சிகள் கதைக்களத்தை வேறொரு பாதைக்கு கொண்டு செல்கிறதோ? என்ற யோசனையும் நமக்கு வருகிறது. இரண்டாம் பாதையின் கதைக்களம் இன்னும் அழுத்தமாகவும் எதார்த்தமாகவும் இருந்திருந்தால் இந்த LGM,தோனியை போல மாஸாக இருந்திருக்கும். மொத்தத்தில் இன்றைய இளம் தலைமுறைக்கான ஒரு ஜாலியான, எதார்த்தமான படத்தை கொடுக்கும் முயற்சியில் இயக்குனர் சற்று ஏமாற்றி இருக்கிறார்.
- நவீன் சரவணன்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“