போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, முன்னாள் தி.மு.க பிரமுகர் ஜாஃபர் குறித்து வெளியாகும் செய்திகள் தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக இயக்குனரும் தயாரிப்பாளருமான அமீர் சுல்தான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரும், டெல்லி போலீசாரும், மேற்கு டெல்லியில் பசாய் தாராபூர் பகுதியில் சோதனை மேற்கொண்டபோது, 50 கிலோ சூடோ பெட்ரின் போதை பொருள் கண்டறியப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான தமிழகத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மூவரும் கடந்த 3 ஆண்டுகளாக சுமார் 3500 கிலோ (2கோடி மதிப்பு) சூடோ பெட்ரின் என்ற போதை பொருளை வெளிநாட்டுக்கு அனுப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த போதை பொருள் கடத்தலுக்கு முக்கிய மூளையாக செயல்பட்டவர் தமிழகத்தை சேர்ந்த, திரைப்பட தயாரிப்பாளர் ஜாஃபர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். சென்னை புரசேவாக்கத்தில் விடுதி மற்றும் அசைவ உணவு ஹோட்டலை நடத்தி வரும் இவர் மங்கை என்ற படத்தை தயாரித்து வருகிறார். மேலும் இவர் இயக்குனர் அமீரின் படங்களையும் தாயரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே ஜாஃபர் சாதிக் குறித்து இயக்குனர் அமீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மரியாதைக்குரிய பத்திரிகை, தொலைக்காட்சி, வலைத்தள, வலை ஒளி, வானொலி, பண்பலை மற்றும் அனைத்து ஊடக நண்பர்களுக்கு வணக்கம்.! கடந்த இரண்டு நாட்களாக, எனது 'இறைவன் மிகப் பெரியவன்" திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜாஃபர் அவர்கள் குறித்து வரும் செய்திகள் அனைத்தும் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது.
கடந்த 22-ம் தேதி நான் "இறைவன் மிகப் பெரியவன்" திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருந்த போது, திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ஏன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது? என்னைச் சுற்றி என்ன நடக்கிறது? என்பதை ஊடகங்கள் வாயிலாகவே நான் அறிந்து கொண்டேன். உண்மை எதுவென்று இப்போது வரை எனக்குத் தெரியவில்லை. எதுவாயினும், செய்திகளில் வரும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்குமேயானால், அது கண்டிக்கப்பட வேண்டியதும், தண்டிக்கப்பட வேண்டியதுமே.!
நடிகர்களோடும், தயாரிப்பாளர்களோடும் சமரசங்களுக்கு உட்பட்டால் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்ற கொள்கைக்கு நான் எப்போதும் எதிரானவன் என்பதை ஊடகத்துறையினர் நன்கு அறிவர். அந்த வகையில், சட்டவிரோதச் செயல்களில் எவர் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுடன் நான் தொடர்ந்து பணியாற்றப் போவதில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தற்போதும், நான் பத்திரிகையாளர்களை வழக்கமாகச் சந்திக்கும் எனது அலுவலகத்தில் திரைப்பட பணிகளில் ஈடுபட்டிருக்கிறேன். முழுவிபரங்கள் தெரிந்த பிறகு, விரைவில் பத்திரிகை மற்றும் ஊடக துறையினரைச் சந்திக்கின்றேன். "இறைவன் மிகப் பெரியவன்" என தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.