திருச்சி சுப்பிரமணிபுரம் பகுதியில் தனியார் உணவகத்தை திறந்து வைக்க வந்த திரைப்பட இயக்குனர் அமீர் விஜய் அரசியலுக்கு அழைத்தால் கண்டிப்பாக அவரது கட்சியில் இணைவேன் என்று கூறியுள்ளார்.
நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் அரசியலுக்கு அமீர் வருவாரா என்கிற கேள்விக்கு நிச்சயமாக வருவேன். இன்று இருக்கும் அரசியல் நெருக்கடியின் காரணமாக அரசியலுக்கு வந்தாலும் வருவேன் என்று பதில் அளித்தார்.
தமிழ் சினிமாவில் கிராமத்து கதைகள் பற்றிய படம் அதிக அளவில் வருவது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், கிராமங்கள் என்பது இந்தியாவின் முதுகெலும்பு ஆகும். ஆகையால் திரைத்துறையில் கிராமத்தை தவிர்த்து விட்டு எந்த படமும் எடுக்க இயலாது என்று கூறினார்.
அதன்பிறகு, போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர்சாதிக்கு, ஜாமீன் வழங்கப்பட்டது குறித்து பேசிய அவர், இந்த வழக்கை பற்றி எனக்கு முழுமையாக தெரியாது. நீதிமன்றத்தில் நீதியரசர் விசாரணையில் எந்த முகாந்திரமும் இல்லாமல் இருப்பதாக தெரியவந்தது. ஆகையால் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதாக தெரிகிறது. மற்றபடி எனக்கு இந்த வழக்கை பற்றி எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார்.
நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா?
அரசியலில் அனைவரும் இருக்க வேண்டும். தற்போது இருக்கும் நெருக்கடி சூழ்நிலையில் அரசியலுக்கு வந்தாலும் வரலாம். அதுதான் எனக்கு உள் உணர்வு சொல்கிறது. தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் என்னை அழைத்தால் அவரது கட்சியில் சேர தயாராக உள்ளேன். விஜய், சீமான் ஆகியோருடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளேன்.
அரசியலுக்கு வந்தால் திராவிட கட்சியில் சேருவீர்களா?
திராவிடம் என்கிற உணர்வு நமது ரத்தத்திலேயே இருக்கிறது - யாரெல்லாம் பாசிசத்திற்கும் ஆரியத்திற்கும் எதிரான கொள்கை கொண்டு செயல்படுகிறார்களே அவர்கள் அனைவரும் திராவிட அரசியல் செய்பவர்கள் தான் எனவே திராவிடம் என்கிற பெயரை தாங்கிய கட்சி தான் அதனை செய்கிறார்கள் என்று அல்ல. பாசிசத்திற்கும் ஆரியத்துக்கும் எதிரானது தான் திராவிடம், அது தான் திராவிடத்தின் அடையாளம். தமிழகத்தைப் பொறுத்தவரை சட்டம் ஒழுங்கு சரியாகத்தான் இருக்கிறது.
மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தை பொறுத்தவரை சட்ட ஒழுங்கை சரி செய்து கொண்டு தான் உள்ளனர். பட்ஜெட்டில் தமிழகத்தை நிராகரித்திருப்பது ஒன்றிய அரசின் உண்மை முகம். நிராகரித்திருப்பது என்பது கூட பெரிதல்ல. ஆனால் அதற்கும் மற்ற அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு கொடுத்து இருக்கிறார்கள் என்பதை என்னும் போது தான் வருத்தமாக உள்ளது எனத் தெரிவித்தார்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.