Advertisment

அட்லியின் கமர்ஷியல் மந்திரம் பாலிவுட்டில் பலித்ததா? ஜவான் விமர்சனம்

தமிழ் இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், இந்த படம் ரசிகர்களை கவர்ந்ததா?

author-image
WebDesk
New Update
Shah Rukh Khan

ஜவான் - ஷாருக்கான்

அட்லீ இயக்கத்தில் பாலிவுட் பாஷா ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியாயிருக்கும் "ஜவான்" படம் மக்களை கவர்ந்துள்ளதா ?

Advertisment

கதைக்களம்:

மும்பையில் நாயகன் ஷாருக்கான் தன் கும்பலுடன் மெட்ரோ ரயிலை ஹைஜாக் செய்து அரசாங்கத்திடம் தன்னுடைய டிமாண்டுகளை சொல்ல, அதன் பிறகு கதையில் என்ன நடக்கிறது? இவர் ஏன் ஹைஜாக் செய்தார் ? இதன் பின்னணியில் இருக்கும் காரணங்கள் என்ன? ஷாருக்கான் உண்மையில் யார்? என்பதை கமர்ஷியலாக சொல்லியிருக்கும் படமே ஜவான்.

நடிகர்களின் நடிப்பு

ஷாருக்கான் ஒரு ஹிந்தி நடிகர் என்பதை இப்படத்தில் எந்த காட்சியிலும் வெளிக்காட்டாதவாறு, ஒரு தமிழ் நடிகர் எவ்வாறு ரசிகர்களை ஈர்ப்பாரோ அதுபோல ஆக்சன், காமெடி, சண்டை, சென்டிமென்ட் என ரசிகர்களை தன் நடிப்பால் திகைக்க வைக்கிறார். அவருடைய எனர்ஜி படம் பார்ப்பவர்களையும் அவருடன் சேர்த்து பயணிக்க வைக்கிறது. குறிப்பாக ஆக்சன் காட்சிகளில் ஹாலிவுட் நடிகர்களுக்கே டப் கொடுக்கும் வகையில் மிரட்டியிருக்கிறார்.

விஜய் சேதுபதியின் வில்லத்தனத்தை நாம் பல படங்களில் பார்த்திருந்தாலும், இப்படத்தில் நம்மையே பயமுறுத்தும் அளவுக்கு கொடூரமான ஒரு வில்லனாக படம் முழுவதும் ரசிகர்களை பயமுறுத்துகிறார். நயன்தாராவுக்கு ஒரு டீசன்ட்டான ரோல் அதை அவர் கச்சிதமாக செய்திருக்கிறார். ஃப்ளாஷ் பேக் போஷனில் தீபிகா படுகோனின் நடிப்பு கலங்க வைக்கிறது. யோகி பாபுக்கு பெரிய வேலை இல்லை. மேலும் ஷாருக்கானின் கூட்டணியில் வரும் பெண்களும் தங்களுடைய நடிப்பால் படத்திற்கு உதவுகிறார்கள்.

இயக்கம் மற்றும் இசை

ஒரு தமிழ் இயக்குனராக பாலிவுட்டில் பாஷா ஷாருக்கானை வைத்து படம் எடுத்திருக்கும் அட்லிக்கு வாழ்த்துக்கள். தன்னுடைய வழக்கமான கமர்சியல் பாணியிலேயே இப்படத்தையும் எடுத்திருக்கிறார். அதேபோல் படத்தில் சொல்லப்பட்டிருக்கும் சமூக கருத்திற்கு மிகப் பெரிய பாராட்டுக்கள். கதை என்னவாக இருந்தாலும் திரைக்கதையில் சுவாரஸ்யம் இருந்தால் படம் வெற்றி பெறும் என்பதற்கு அட்லியின் முந்தைய படங்களைப் போலவே இப்படமும் ஒரு சாட்சி.

படத்திற்கு இன்னொரு நாயகன் என்று அனிருத்தை சொல்லலாம். இதுவரை ஹிந்தி ரசிகர்களே கேட்காத பல மாஸ் பிஜிஎம் (BGM) யை கொட்டி அசத்தியிருக்கிறார். ஷாருக்கானின் ஒவ்வொரு மாஸ் காட்சியையும் நாம் வியந்து பார்க்க அனிருத் இசைக்கும் மிகப்பெரிய பங்கு இருக்கிறது. பாடல்கள் ஏற்கனவே ஹிட் அடித்ததால் இசையில் புதிய உச்சத்தை படத்தின் மூலம் அனிருத் தொட்டிருக்கிறார்.

படம் எப்படி?

படத்தின் தொடக்கத்திலேயே ஒரு மெட்ரோ ரயிலை ஹைஜாக் செய்யும் வில்லன் போன்ற தோற்றத்தில் ஷாருக்கானின் அறிமுகத்தில் தொடங்கி படம் முடியும் வரை ரசிகர்கள் கொண்டாடுவதற்கான பல மாஸ் மொமெண்ட்ஸ் படத்தில் இருக்கிறது. ஆனால் வெறும் மாஸ், ஆக்சன் மட்டுமே இல்லாமல் இப்படத்தில் பேசப்பட்டிருக்கும் ஒரு மிகப்பெரிய அரசியலும் அதை சொல்லி இருக்கும் விதமும் ரசிகர்களை கலங்க வைக்கிறது. இப்படி எல்லாம் நடப்பது நமக்குத் தெரிந்தும் அதை தடுக்க நம்மால் எதுவும் செய்ய முடியவில்லை என்ற ஒவ்வொரு தனி மனிதனின் ஏக்கதையும் ஷாருக்கான் திரையில் வெளிப்படுத்தும் போது நாமே வெற்றி பெற்றது போல ஒரு உணர்வை நமக்கு கொடுக்கிறது.

அது மட்டுமல்லாமல் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும்  பல காட்சிகள் வைத்து அட்லி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறார். இதுபோன்ற பல பாசிட்டிவ்ஸ் இருந்தாலும் பல காட்சிகள் மெர்சல் படத்தை நமக்கு நினைவூட்டிக்கொண்டே இருப்பதை தவிர்க்க முடியவில்லை. மேலும் பல்வேறு தமிழ் படங்களின் சாயலும் இப்படத்தில் இடம்பெற்றிருக்கிறது. மொத்தத்தில் ஒரு மாஸ் கமர்சியல் படத்துடன் எமோஷனலையும் கலந்து, படம் முடியும்போது ஒரு நல்ல என்டர்டெய்ன்ரை பார்த்த திருப்தியை ஷாருக்கானின் ஜவான் கொடுக்கிறது.

நவீன் சரவணன்

“தமிழ்இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Shah Rukh Khan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment