/indian-express-tamil/media/media_files/2025/03/20/HAVR9SVKhHhh0CqKQMSC.jpg)
அறம் என்ற கதைக்கு விருது வழங்கி கொண்டாடிய திராவிடர் கழகம் நான் அதை நிஜ வாழ்வில் அதனை நடைமுறைப்படுத்தும்போது என்னை எதிரியாக சித்தரிக்கிறது. இதனால் நான் திராவிடர் கழகம் எனக்கு அளித்த பெரியார் விருதை திருப்பி அளிக்கிறேன் என்று இயக்குனர் கோபி நயினார் கூறியுள்ளார்.
நயன்தாரா நடிப்பில் வெளியான அறம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் இயக்குனர்கள் வரிசையில் இடம் பிடித்தவர் இயக்குனர் கோபி நயினார். திருவள்ளூர் மாவட்டம் காட்டூர் பகுதியில் வசித்து வரும் இவர், அடுத்து வெற்றிமாறன் தயாரிப்பில் மனுசி என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், கோபி நயினார். திருவள்ளூர் மாவட்டத்தில், பல ஆண்டுகளாக நில உரிமை தொடர்பான பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.
குறிப்பாக, அதானியின் காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு எதிரான போராட்டங்களில் மக்களோடு களத்தில் நின்று போராட்டி வரும் இவர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் பழவேற்காடு பகுதியில் குவாரிக்காக நிலத்தை தோண்டும் நடவடிக்கையை எதிர்த்து மக்களுடன் சேர்ந்து தீவிரமாக போராட்டத்தில் ஈடுபட்டார். இதனிடையே சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய கோபி நயினார், திமுக அரசு மீதும் திமுக அரசுக்கு ஆதரவாக செயல்படும் சிந்தனையாளர்கள் மீதும் கடுமையாக விமர்சனங்களை முன் வைத்து இருந்தார்.
மக்களுக்காக போராடும் செயற்பாட்டாளர்கள் மீது அரசு வழக்குப்பதிவு நடவடிக்கை எடுக்கிறது திராவிட அரசுக்கு ஆதரவாக செயல்படும் மதிவதனி போன்றவர்கள் திராவிட மக்களுக்கு பிரச்னை என்று முன் வருவதில்லை என்று கடுமையாக விமர்சித்ததை தொடர்ந்து, திராவிடர் கழக, துணைப்பொதுச் செயலாளர் மதிவதனிக்கு ஆதரவாகவும், கோபி நயினாருக்கு எதிராகவும் இணையத்தில் தி.மு.க ஆதரவாளர்கள் கடுமையாக விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.
— Gopi Nainar (@GopiNainar) March 20, 2025
இது குறித்து கோபி நயினார் பேசியதாக சில ஆடியோக்களும் இணையத்தில் வெளியிடப்பட்டு வரும் நிலையில், கோபி நயினார் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தலித் மக்களுக்கு குடிமனை கேட்டும் அவர்களின் வாழ்நிலங்களில் மண் அள்ளுவதை தடுக்க கோரியும் போராடியதற்காக பெரியாரிய சிந்தனையாளர்களால் நான் மிகவும் கேவலமாக பொதுவெளியில் இழிவுபடுத்தப்படுகிறேன்.
தன்னை ஜனநாயக அமைப்பு என்று கூறிக்கொள்கின்ற ஒரு அமைப்பை எதிர்த்து ஜனநாயக முறையில் கேள்வி எழுப்பினால் சர்வாதிகார மனநிலையோடு அது என்னை எதிர்கொள்கிறது இத்தகைய சூழலில் இந்த சர்வாதிகார மனநிலை கொண்டவர்களின் மத்தியில் வாழ்வதற்கே எனக்கு அச்சமூட்டுகிறது
தமிழகம் முழுவதும் தலித் மக்களின் நிலை இது தான் என்று நம்புகிறேன் தமிழ்நாட்டில் ஒரு தலித் ஒரு ஜனநாயக சிந்தனையோடு அரசியல் கேள்விகளை எழுப்புவது பெரியாரிய சிந்தனையாளர்களுக்கு திராவிட சிந்தாந்தவாதிகளுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்துகிறது. இது ஒரு சர்வாதிகார போக்கின் மனநிலை. இந்த சூழலில் இன்று கடுமையாக அவமதிக்கப்படுகிற நான் எதிர்காலத்தில் இவர்களால் கொல்லப்படவும் நேரிடலாம் இந்திய முழுக்க நடக்கின்ற அறிவுஜீவிகளின் சமூக செயற்பாடட்டாளர்கள் கலைஞர்கள் மீது நடந்த படுகொலைக்கும் எதிர்காலத்தில் எனக்கு நிகழ போகும் படுகொலைக்கும் பெரிய வேறுபாடு இல்லை.
என்றும் பெரியார் அம்பேத்கர் மார்க்ஸ் போராட்ட உணர்வோடு pic.twitter.com/nU8CnA80Bn
— Gopi Nainar (@GopiNainar) March 20, 2025
நான் அறம் என்கிற திரைப்படத்தை இயக்கினேன். அத்திரைப்படத்தின் கருத்து என்னவென்றால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு துயரமென்றால் இந்த அரசு எதுவும் செய்யாது என்பதே. அதற்காதான் திராவிடர் கழகம் என்னை பாராட்டி தந்தை பெரியார் விருது வழங்கியது. நிகழ்காலத்தில் ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் போராட்டங்களை முன்னெடுக்கும் போது இந்த செயல் என்னை அவமானப்படுத்துகிறது. அறம் என்ற கதைக்கு விருது வழங்கி கொண்டாடிய திராவிடர் கழகம் நிஜ வாழ்வில் நடைமுறைப்படுத்தும் போது என்னை இந்த சமூகத்தின் எதிரியாக சித்திரிக்கிறது. இது போன்ற காரணுங்களுக்காக அறம் திரைப்படத்திற்காக திராவிடர் கழகம் எனக்கு வழங்கிய பெரியார் விருதை திருப்பியளிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.