தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான ஹரியின் தந்தை வி.ஏ.கோபாலகிருஷ்ணன் (88) இன்று சென்னையில் சென்னையில் மரணமடைந்தார்.
2002-ம் ஆண்டு பிரஷாந்த் சிம்ரன் நடிப்பில் வெளியான தமிழ் என்ற படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் ஹரி. தொடர்ந்து சாமி, தாமிரபரணி, வேல், சிங்கம் படங்கள் உள்ளிட்ட பல படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வரும் ஹரி கடைசியாக தனது மைத்துனரும் நடிகருமான அருண் விஜய் நடிப்பில் யானை என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
தொடர்ந்து தற்போது விஷால் நடிப்பில் அவரின் 34-வது படத்தை ஹரி இயக்கி வருகிறார். தூத்துக்குடி சுற்றுவட்டார பகுதியில் நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், விரைவில் டைட்டில் டீசர் வெளியாகும் என்று விஷால் அறிவித்திருந்தார். இந்த படத்தின் வேலைகளில் இயக்குனர் ஹரி பிஸியாக இருந்து வரும் நிலையில், தற்போது அவரது தந்தை வி.ஏ.கோபாலகிருஷ்ணன் மரணமடைந்துள்ளார்.
88 வயதான வி.ஏ.கோபாலகிருஷ்ணன் கடந்த சில வாரங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றிஇன்று (அக் 21) காலை அவர் மரணமடைந்தார். ஹரியின் தந்தையின் மறைவு அவரது குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோபாலகிருஷ்ணனின் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஹரியின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. பின்னர் அவர்களது சொந்த கிராமமான தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கச்சனாவிளைக்கு எடுத்து செல்லப்பட்டு, அவரது இறுதி சடங்குகள் நாளை (அக். 22) நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இயக்குனர் ஹரி உட்பட, கோபாலகிருஷ்ணனுக்கு ஐந்து மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.
இதற்கிடையில், ஹரியின் ரசிகர்களும் நண்பர்களும் அவரது தந்தை மரணத்திற்கு சமூகவலைதளங்களில் தங்கள் இரங்கலைப் பகிர்ந்து வருகின்றனர், அதே சமயம் ஹரியின் நெருக்கமான நண்பர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் அவரது தந்தைக்கு இறுதி அஞ்சலி செலுத்த சென்னையில் உள்ள ஹரியின் வீட்டிற்குச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“