90-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை தேவயானி, அந்த நேரத்தில் நடிகர் நெப்போலியனுடன் நடிக்க கூடாது என்று அவரது அம்மா தெரிவித்ததாக இயக்குனர் களஞ்சியம் ஒரு பேட்டியில் கூறியுள்ள நிலையில், அதற்கான காரணத்தையும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 1996-ம் ஆண்டு வெளியான பூமணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் களஞ்சியம். முரளி, தேவயானி, பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படம் பெரிய வெற்றியை பெற்றிருந்த நிலையில், தமிழ்நாடு அரசின் சிறந்த கதைக்கான விருதையும் பெற்றிருந்தது. அதன்பிறகு கிழக்கும் மேற்கும் என்ற படத்தை இயக்கினார். இந்த படத்திலும் தேவயானியே நாயகியாக நடித்திருந்தார்.
தொடர்ந்து பூந்தோட்டம், நிலவே முகம் காட்டு ஆகிய படங்களை இயக்கிய களஞ்சியம் இந்த படங்களிலும், நாயகியாக தேவயானியையே நடிக்க வைத்திருந்தார். இந்த படங்களும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. 2001-ம் ஆண்டு பிரபு நடிப்பில் மிட்டா மிராசு என்ற படத்தை கொடுத்த களஞ்சியம், அதன்பிறகு சில படங்களை இயக்க முயற்சித்தும், பாதியில் நின்று போனது. குறிப்பாக இளையராஜாவின் தயாரிப்பில், சங்கீத திருநாள் என்ற பெயரில் தொடங்கப்பட்ட படம் அதன்பிறகு ட்ராப் செய்யப்பட்டது.
10 வருட இடைவெளிக்கு பின் கருங்காலி என்ற படத்தை இயக்கி தானே நாயகனாகவும் நடித்திருந்தார். இந்த படத்தில் அஞ்சலி நாயகியாக நடிக்க, படம் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்றது. அதே சமயம் படப்பிடிப்பின்போது அஞ்சலிக்கும் களஞ்சியத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இது குறித்து வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அடுத்து 2019-ம் ஆண்டு சீமான் நடிப்பில் முந்திரி காடு என்ற படத்தை இயக்கியிருந்தார்
தற்போது படங்கள் இயக்காத களஞ்சியம், தனது சினிமா வாழ்க்கை குறித்து சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் பேசியிருந்தார். இதில், பூமணி படம் வெளியாகி ஹிட்டானவுடன், தெய்வான மூவிஸ் துரைராஜ் சார் என்னை வீ்ட்டில் சந்தித்து, நான் இப்போது கடனில் இருக்கிறேன். குஷ்பு மற்றும் நெப்போலியன் இருவருக்கும் அட்வான்ஸ் கொடுத்திருக்கிறேன். இருவரையும் வைத்து படம் இயக்கி கொடுங்கள். எவ்வளவு சம்பளம் கேட்டாளும் கொடுக்கிறேன் என்று சொன்னார். அப்போது குஷ்பு, நெப்போலியன் நடித்த எட்டுப்பட்டி ராசா படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
மீண்டும் குஷ்பு நெப்போலியன் ஜோடி சேர்ந்தால் நன்றாக இருக்காது தேவயானியை ஜோடியாக போடலாம் என்று சொன்னேன். அவரும் சம்மதம் சொன்னார். அதன்பிறகு தேவயானியிடம் பேசும்போது அவரது அம்மா நெப்போலியன் கூட என் மகள் நடிக்க மாட்டாள். பூமணி ஹிட்க்கு பிறகு விஜய் அஜித்துடன் நடிக்க வாய்ப்பு வருகிறது. என்று சொல்லி மறுத்தார். ஆனால் தேவயானி, இப்போதான் அவர் பூமணி என்ற ஹிட் படத்தை கொடுத்துள்ளார். மீண்டும் அவருக்கு ஒரு படம் கொடுப்பதில் தவறில்லை என்று சொல்லி நடித்தார்.
அப்போது உருவான படம் தான் கிழக்கும் மேற்கும். இந்த படமும் தமிழக அரசின் விருதை வென்றது என்று கூறியுள்ளார். நெப்போலியன் தேவயானி இணைந்து நடித்த கிழக்கும் மேற்கும் படத்தில் நாசர், கீதா, மணிவண்ணன், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“