எண்ணி ஏழு நாட்கள் என்ற திரைப்படத்திற்காக வாங்கிய கடனை திருப்ப செலுத்தாத வழங்கில் இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2001-ம் ஆண்டு வெளியான ஆனந்தம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் லிங்குசாமி. தொடர்ந்து ரன் சண்டைக்கோழி. பையா, வேட்டை, என சில வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். இதில் கடந்த 2014-ம் ஆண்டு இவர் இயக்கத்தில் சூர்யா நடித்த அஞ்சான் படம் படுதோல்வியை சந்தித்து.
அதன்பிறகு படவாய்ப்பு கிடைக்காமல் இருந்த லிங்குசாமி, 8 வருடங்களுக்கு பிறகு பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொதினேனியை வைத்து தி வாரியர் என்ற படத்தை இயக்கினார். சமீபத்தில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இதனிடையே எண்ணி ஏழு நாட்கள் என்ற திரைப்படத்திற்காக வாங்கிய கடனை இயக்குநர் லிங்குசாமி திரும்ப செலுத்தவில்லை என்று கூறி பிவிபி கேப்பிட்டல்ஸ் நிறுவனம் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த கடனை திரும்ப செலுத்தும் வகையில் லிங்குசாமி கொடுத்த 1.03 கோடிக்கான வங்கி காசோலையில் பணமில்லாமல் திரும்பியதாக அந்நிறுவனம் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் வாங்கிய கடனை திரும்ப செலுத்தாத இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இயக்குநர் லிங்குசாமிக்கு சிறை தண்டனை விதித்து திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு நடிகர் கார்த்தி மற்றும் நடிகை சமந்தாவை வைத்து எண்ணி ஏழு நாட்கள் என்ற படத்தை தயாரிப்பதற்காக தனது திருப்பதி பிரதர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் பிவிபி கேப்பிட்டல்ஸ் என்ற நிதி நிறுவனத்திடம் 1.03 கோடிகடன் பெற்றது குறிப்பிடத்தக்கது
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“