scorecardresearch

வளையல் கடை வாலிபன் ஹீரோ… +2 மாணவி ஹீரோயின்… வெள்ளி விழா படம் கொடுத்த பாரதிராஜா

அறிமுக இயக்குனராக வந்து தொடர்ந்து 5 சில்வர் ஜூப்ளி படத்தை கொடுத்த பெருமைக்கு சொந்தக்காரர் இயக்குனர் பாரதிராஜா

Bharathiraja
பாரதிராஜா

ஸ்டூடியோவுக்குள் முடங்கி கிடந்த தமிழ் சினிமாவை வெளியுலகத்திற்கு கொண்டுவந்த பெருமைக்கு சொந்தக்காரர் இயக்குனர் பாராதிராஜா. 1997-ம் ஆண்டு வெளியான 16 வயதினிலே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான இவர், சப்பானி, பரட்டை, மயிலு என்ற எதார்த்த மனிதர்களை தனது படத்தில் பிரதிபலித்தார்.

ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்ற 16 வயதினிலே படம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத அடையாளமாக இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிறம் மாறாத பூக்கள், அலைகள் ஓய்வதில்லை உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார்.

அறிமுக இயக்குனராக வந்து தொடர்ந்து 5 சில்வர் ஜூப்ளி படத்தை கொடுத்த பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1983-ம் ஆண்டு வெளியான படம் தான் மண் வாசனை. கிராமத்து எதார்த்தத்தை தெளியாக காட்டிய இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு பாண்டியன் என்ற ஒரு நடிகர் கிடைத்தார். ரேவதி இந்த படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.

Shobana
நடிகை ஷோபனா

பாராதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்த சித்ரா லட்சுமணன் தனது காயத்ரி பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்த இந்த படத்தில் நடிக்க பல ஹீரோக்களிடம் கதை சொல்லியுள்ளார். ஆனால் இந்த கதைக்காக எந்த நடிகரும் செட் ஆகவில்லை. ஆனாலும் நாயகன் வேட்டை தொடர்ந்தது. நாயகியாக நடிகை ஷோபனா நடிக்க ஒப்பந்ம் ஆனார். இது தொடர்பாக பத்திரிக்கைளில் செய்திகள் வெளியானது.

ஆனால் சில மாதங்களில் அவர் தனது +2 தேர்வை காரணம் காட்டி இந்த படத்தில் இருந்து விலகிவிட்டார். அதன்பிறகுதான் இந்த படத்தில் நாயகியாக நடிகை ரேவதி ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த படத்தில் நடிக்கும்போது நடிகை ரேவதியும் +2 மாணவி தான். படப்பிடிப்பு நடைபெறும்போது படித்துக்கொண்டே இருப்பார். அப்படி படித்தே அவர் நல்ல மார்க் எடுத்து பாஸ் பண்ணினார்.

மண் வாசனை படத்திற்கு ஒரு கட்டத்தில் நாயகன் இல்லாமல் படப்பிடிப்பை தேனியில் தொடங்கிவிட்டோம். நான் பாரதிராஜாவிடம் சென்று நாயகன் இல்லாமல் எப்படி என்று கேட்டேன். மதுரையில் பல கல்லூரிகள் உள்ளது. அங்கெல்லாம் சென்று பார்ப்போம் நமக்கு ஏற்ற ஒரு பையன் கிடைப்பான் என்று சொன்னார். எனக்கும் சரி என்று தோன்றியது. அதன்பிறகு மதுரைக்கு சென்றோம்.

Pandian Revathi
பாண்டியன் – ரேவதி மண்வாசனை படம்

அனைத்து கல்லூரிகளுக்கும் சென்றோம். ஆனால் எங்களுக்கான நாயகன் கிடைக்கவில்லை. அதன்பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு வெளியில் வந்து காரில் ஏறினோம். அப்போது ஒரு பையன் பாரதிராஜாவையே பார்த்துக்கொண்டிருந்தான் உடனே பாரதிராஜா அவனை காரில் ஏற்றிக்கொள்ள சொன்னார். ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு அந்த பையனை ரூமுக்கு அழைத்து சென்றோம்.

அங்கு சென்று அந்த பையனிடம், சிரி, முறை என்று பாரதிராஜா சொன்னார். அவனும் செய்தான். இந்த பையன் நல்லாருக்கானே இவனே நாயகனா நடிக்க வைக்கலாம் என்று சொன்னார். ஆனால் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் பாரதிராஜாவின் தன்னம்பிக்கை மண் வாசனை படத்தில் அந்த பையனை நாயகனாக நடிக்க வைத்தது. படம் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றது. மதுரையில் இந்த படம் 286 நாட்கள் ஓடியது.

இந்த படத்தில் நாயகனாக நடித்தவர்தான் பின்னாளில் 75 படங்களில் பல நாயகிகளுடன் இணைந்து நடித்த நடிகர் பாண்டியன். அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வளையல் கடை நடத்தி வந்தார் என்று இயக்குனரும் பத்திரிக்கையாளருமான சித்ரா லட்சுமணன், இயக்குனர் பாரதிராஜாவின் பிறந்த நாள் வாழ்த்து செய்தியில் இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.   

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema director man vaasani movie flashback says chithra lakshman

Best of Express