பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் ரஜினிகாந்தை நிராகரித்தது உண்மைதான் என்று இயக்குனர் மணிரத்னம் தெரிவித்துள்ளார்.
கல்கி எழுதிய வரலாற்று காவியமான பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்க பலர் பல்வேறு காலக்கட்டங்களில் முயற்சி செய்திருந்தாலும் இக்காலத்தில் இயக்குனர் மணிரத்னம் அந்த முயற்சியில் வெற்றி கண்டுள்ளார். அவர் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30-ந் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யாராய், சரத்குமார், பார்த்தீபன், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். வெளியான நாள் முதல் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் பொன்னியின் செல்வன் குறித்து நாள் தோறும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது.
இதனிடையே பொன்னியின் செல்வன் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், தான் பொன்னியின் செல்வன் நாவல் படித்தது குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து இந்த நாவலில் வரும் முக்கிய கேரக்டரான பெரிய பழுவேட்டையார் கேரக்டரில் நான் நடிக்கிறேன் என்று மணி சாரிடம் கேட்டேன்.
ஆனால் உங்களது ரசிகர்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறி அதை அவர் நிராகரித்துவிட்டார். யாராக இருந்தாலும் இதை சரி என்று சொல்லியிருப்பார்கள். ஆனால் மணி சார் அதை செய்யவில்லை. அவர் ஒரு ஜென்டில்மேன் என்று கூறியிருந்தார்.
இது குறித்து சமீபத்தில் விளக்கம் அளித்திருந்த இயக்குனர் மணிரத்னம் ரஜினிகாந்த் இந்த படத்தில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று விரும்பியது உண்மைதான். அதை அவர் அன்புடன் குறிப்பிட்டார். அவர் பெரிய நட்சத்திரம். படத்தின் தேர்விற்கு நிறைய கேரக்டர்கள் கிடைத்துள்ளன. கதைக்கு நேர்மையாக இருக்க வேண்டும் என்பதால் என்னால் உங்களை கொண்டுவர முடியாது என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil