மனிதன் எவ்வளவு அன்பானவன் அவனிடம் எவ்வளவு அன்பு உள்ளது என்பதும், அவனை வேறொரு மனிதனாக மாற்றும் சக்தியும் ஆளுமையும் "காதலுக்கு" மட்டுமே உள்ளது என மாணவர்கள் மத்தியில் புத்துணர்வு அளிக்கும் வகையில் இயக்குநர் ராம் பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இயக்குனர்களில் ஒருவரான ராம், தற்போது "ஏழு கடல் ஏழு மலை’’ என்ற படத்தை இயக்கியுள்ளார். நிவின்பாலி, அஞ்சலி, சூரி ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ள இந்த திரைப்படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் ஹிலாரிகஸ் (Hilaricas) எனும் கல்லூரிகளுக்கு இடையிலான போட்டியில், இயக்குனர் ராம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ஜெயம்ரவி, நடிகை அஞ்சலி, அனிகா உட்பட தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் கலந்து கொண்டனர். ஏழு கடல் ஏழு மலை திரைப்படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டது. பின்னர் இந்த நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய இயக்குனர் ராம், காதலர் தினத்தில் ஏழு கடல் ஏழு மலை படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், காதல் மனிதன் உருவாவதற்கு முன்பு இருந்தே உலகத்தில் இருந்து வருகிறது. காதல் என்பது பாலின வேற்றுமை, சாதி, மதத்தை தாண்டியது. காதல் என்கிற பிரபஞ்ச சக்தி தான் இந்த உலகத்தை தன் கையில் பிடித்து வைத்திருக்கிறது. ஏழு கடல் ஏழு மலை படம் உருவாக காரணம் கடந்த 2019-ல் கொரோனா காலத்தில் “மனித குளம் நம்பிக்கையூட்டும் வரலாறு” என்ற புத்தகத்தை படித்தேன். அதில் ஒரு பகுதியில் இரண்டாம் உலகப் போர் நடைபெறுகிறது,
மிகப்பெரிய அழிவுகள் நடந்த காலம் அப்போது ராணுவ கமாண்டர் ஒருவர் தனது வீரர்களுக்கு எதிரே உள்ள மனிதர்களை சுட உத்தரவிடுகிறார் - நூறு பேர் இருந்தாலும் 10 பேர் மட்டுமே சுடுவார்கள், மற்ற யாவரும் சுட மாட்டார்கள் நடிப்பார்கள். காரணம் இயல்பாகவே மனிதர்கள் மற்றொரு மனிதனை சுட மாட்டார்கள், மனிதனால் மற்றொருவரை வெறுக்க, துன்புறுத்த முடியாது.
மனிதன் தன்னுடைய எல்லாம் வேறுபாட்டையும் தாண்டி கரம் கோர்த்து நிற்பான் என்பதை விஞ்ஞான பூர்வமாக நிரூபித்த கதை. நீங்களும் அந்தப் புத்தகத்தை படிக்கும் போது மனதில் மகிழ்ச்சி தரும். நீங்கள் எவ்வளவு அன்பாளர்கள் மற்றும் உங்களிடம் எவ்வளவு காதல் உள்ளது என்பது புரியும். அது உங்களை வேறொரு மனிதனாக மாற்றும். உற்சாகம் பெற்றவனாக, மேலும் இசை, கவிதை, நடனம் ஆகியவற்றை ரசிக்க தூண்டும். அந்த புத்தகத்தின் பாதிப்பு, இந்த தத்துவத்தின் அடிப்படையில் உருவானதே “ஏழு கடல் ஏழு மலை” திரைப்படம்.
எனது முந்தைய நான்கு படங்கள் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், ஐந்தாவது படமான “ஏழு கடல் ஏழு மலை” நிச்சயமாக பிடிக்கும். இந்த படம் முழுக்க முழுக்க பேசுவது "மானுடத்தின் காதலை பற்றியும், இந்த உலகத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி மட்டுமே" என தெரிவித்துள்ளார்.
பி.ரஹ்மான். கோவை மாவட்டம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“