நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சை நடிகர் மன்சூர் அலிகான் பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது உனக்கு நல்லது இல்ல மன்சூர் வேற மாதிரி ஆயிட்ட என்று இயக்குனர் ஆர்.கே.செல்வமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல வில்லன் நடிகரான மன்சூர் அலிகான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், இப்போது சினிமாவில் ரேப் சீன் வைக்க மாட்டேன்கிறார்கள். அடுத்து த்ரிஷாவுடன் நடிக்க போகிறோம் என்றதும் ஓகே ரேப் சீன் இருக்கும், குஷ்புவை தூக்கி போட்ட மாதிரி, ரோஜாவை தூக்கி போட்ட மாதிரி த்ரிஷாவை போடலாமா என்று நினைத்தேன். 150 படங்களில் நான் பார்க்காத ரேப்பா என்று சர்ச்சையாக பேசியிருந்தார்.
மன்சூரின் இந்த பேச்சு தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில்மன்சூர் அலிகான் போன்றவர்கள் மனிதகுலத்திற்கே கெட்ட பெயரை ஏற்படுத்துகிறார்கள் என்று நடிகை த்ரிஷா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து மன்சூர் அலிகான் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து நடிகர் சங்கத்தினர் வெளியிட்ட அறிக்கையில் அவர் இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்கும் வரை சங்கத்தில் இருந்து நீக்கம் செய்ய ஆலோசித்து வருவதாக கூறியிருந்தனர். மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டு பிரச்சனையை முடிக்க வேண்டும் என்று, தயாரிப்பாளர் சங்க தலைவர் பாரதிராஜா, வலியுறுத்தியுள்ளார்.
அந்த வகையில் தற்போது இயக்குனரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.செல்வமணி மன்சூர் அலிகானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆர்கேசெல்வமணி இயக்கிய கேப்டன் பிரபாகரன் படத்தில் கொடூர வில்லனாக நடித்திருந்த மன்சூர் அலிகான், தொடர்ந்து, செம்பருத்தி, அதிரடி படை, அசுரன் என ஆர்.கே.செல்வமணியின் படங்களில் நடித்துள்ளார். இதனிடையே தற்போது மன்சூரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள செல்வமணி கூறுகையில்,
மன்சூர் அலிகானிடம் விளக்கம் கேட்க வேண்டிய நிலையில் இல்லை, அவர் பேட்டியை பார்க்கும்போது அருவருப்பாக இருக்கிறது. காமெடி என்ற பெயரில் ஆபாசமாக பேசியிருக்கிறார். ஒருவரின் காலை மிதித்துவிட்டால் அவருக்கு வலிக்கிறது என்று நாம் மன்னிப்பு கேட்போம். அதுபோலத்தான் அவர் பேசிய வார்த்தை பலருக்கும் வலிக்கிறது. அதனால் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
மன்சூர் ரொம்ப நல்லவன் நீ நல்ல நடிகன், ஆனால் இந்த மாதிரி பேசி பெரிய விஷயமாக மாற்றாதே, மன்னிப்பு கேட்பது தான் உனக்கு நல்லது. மன்னிப்பு கேட்காமல் இதை பெரிதுபடுத்த வேண்டும் என்று நினைத்தால் நல்லா இருக்காது. ஒரு சகோதரன் நண்பன் என்ற முறையில் கேட்கிறேன். தயவு செய்து மன்னிப்பு கேட்டுவிடு. மன்னிப்பு கேட்பதால் நீ குறைந்துவிடப்போவதில்லை.
அளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷம் நீ விஷயத்தை கையில் வைத்துக்கொண்டு இருக்கிறாய். அவர்கள் வருத்தப்படுகிறார்கள் என்பதால் நீ மன்னிப்பு கேட்க வேண்டியது அவசியம். இது நல்லது இல்ல மன்சூர் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.