அர்ஜுன் தாஸ், தன்யா ரவிச்சந்திரன் நடிப்பில் சாந்தகுமார் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ''ரசவாதி'' திரைப்படத்தின் முழு விமர்சனம்
கதைக்களம்
கொடைக்கானலில் சித்த மருத்துவராக இருக்கும் சதாசிவ பாண்டியன் (அர்ஜுன் தாஸ்) யாருக்கும் தீங்கு நினைக்காமல், இயற்கையை நேசிக்கும் அன்பான இளைஞன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதே ஊரில் ஹோட்டல் மேனேஜராக புதிதாக வேலைக்கு சேர்ந்த தன்யா ரவிச்சந்திரனுடன் நட்பாக பழகுகிறார்.
ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். ஆனால், அதே கொடைக்கானலுக்கு இன்ஸ்பெக்டராக பணிக்கு சேர்ந்த சுஜித் ஷங்கருக்கு, இவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக இருப்பது பிடிக்கவில்லை. சித்தாவை பழிவாங்க போலீஸ் அதிகாரி சுஜித் நினைக்கிறார்
இதனால் அவர்கள் இருவரையும் பிரிக்க முயற்சிகள் மேற்கொள்கிறார். அவர் ஏன் அர்ஜுன் தாஸ் மீது கோபத்தில் இருக்கிறார் ? இருவரும் என்ன பிரச்சனை ? என்பதே மீதிக்கதை.
நடிகர்களின் நடிப்பு :
அர்ஜுன் தாஸ் தனது கதாபாத்திரத்திற்கு தேவையான எதார்த்த நடிப்பை கொடுத்திருக்கிறார். மென்மையாக இளைஞனாக அவரின் அலட்டிக்கொள்ளாத நடிப்பும், பேச்சும், உடல் மொழியும் பக்கவாக அமைந்திருக்கிறது. சண்டைக் காட்சிகளிலும் மிரட்டியிருக்கிறார். தன்யா தன்னுடைய நடிப்பில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். விஜே ரம்யா, ஜி.எம்.சுந்தர், ரிஷிகாந்த் உள்ளிட்டோரும் குறையில்லாத நடிப்பை வழங்கியுள்ளனர்.
இயக்கம் மற்றும் இசை :
தமிழ் சினிமாவின் சிறந்த படைப்புகளில் ஒன்றான "மகாமுனி" படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 5 வருடங்கள் கழித்து சாந்தகுமாரின் படம் வெளியாகியிருக்கிறது. மிகவும் சுவாரசியமான கதையை தேர்ந்தெடுத்த இயக்குனர் அக்கதையை சொல்ல வந்த விதத்தில் சற்று சொதப்பி இருக்கிறார். தமனின் இசையில் பாடல்கள் சுமார். பின்னணி இசை மூலம் காட்சிகளை தூக்கி நிறுத்த முயற்சித்திருக்கிறார்.
படத்தின் பிளஸ் :
அர்ஜுன் தாஸின் அமர்க்களமான நடிப்பு
சுவாரசியமான கதை
கண் கவரும் ஒளிப்பதிவு
சைக்கோ வில்லனின் அபார நடிப்பு
படத்தின் மைனஸ் :
அழுத்தமில்லாத கதாபாத்திரங்கள்
பொறுமையை சோதிக்கும் திரைக்கதை
படத்தின் நீளம்
பாடல்கள்
மொத்தத்தில் பொறுமையாக உட்கார்ந்து பார்த்தல் ஓரளவிற்கு இப்படம் உங்களை கவரலாம் . வேகத்தை விரும்பும் ரசிகர்களுக்கு இந்த படம் ஏமாற்றம்தான்.
நவீன் சரவணன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“