நடிகர் தனுஷ் கட்டியுள்ள புதிய வீடு கோவில் போலவும், அவரது அப்பா அம்மா வாழும்போதே அவர்களை சொர்கத்தில் வாழவைக்கிறார் தனுஷ் என்று பிரபல இயக்குனர் சுப்பிரமணிய சிவா வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். நடிகராக மட்டுமல்லாமல் பாடலாசிரியர், தயாரிப்பாளர் இயக்குனர், பாடகர் என பன்முக திறமைகளை தனக்குள் வைத்துள்ள முக்கிய நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். இவரது நடிப்பில் நேற்று முன்தினம் வெளியான வாத்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

முதல் நாளிலேயே வாத்தி படம் பெரிய வசூல் சாதனை நிகழ்த்தியதாக தகவல் வெளியாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து தனுஷ், அடுத்து கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் தனுஷ் போயஸ் கார்டனில் புதிதாக வீடு கட்டும் பணியை தொடங்கினார். இந்த வீட்டுக்கு அஸ்திவாரம் அமைத்தது முதல் இது தொடர்பான தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வந்தது. தற்போது தனுஷின் புதிய வீடு பணிகள் அனைத்தும் முடிந்து சமீபத்தில் கிரகபிரவேஷம் நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் சுப்பிரமணிய சிவா, தனது பேஸ்புக் பக்கத்தில் தனுஷின் வீடு குறித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இந்த பதிவில்,
தம்பி தனுஷின்
புதிய வீடு…
கோவில் உணர்வு
எனக்கு..
வாழும் போதே
தாய்,தந்தையை
சொர்கத்தில் வாழ
வைக்கும் பிள்ளைகள்,
தெய்வமாக
உணர படுகிறார்கள்…
மேலும்,
தன் பிள்ளைகளுக்கும்,
மற்றவர்களுக்கும்,
எடுத்துகாட்டாகவும்,
உதாரணமாகவும்,
உயர்ந்து விடுகிறார்கள்..
இன்னும்
பல வெற்றிகளும்
சாதனைகளும்
உன்னை துரத்தட்டும்,
உன்னை பார்த்து ஏங்கட்டும்,
உன்னை கண்டு வியக்கட்டும்,
வாழ்க தம்பி,
வாழ்வாங்கு வாழ்க..
என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தனுஷ் நடிப்பில் வெளியான திருடா திருடி மற்றும் சீடன் ஆகிய படங்களை சுப்பிரமணிய சிவா இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் தனுஷ் ரசிகர்கள் மன்ற தலைவராகவும் சுப்பிரமணிய சிவா இருந்து வருகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/