விஜய் நடித்துள்ள கோட் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த டிரெய்லரில் உள்ள சந்தேகங்களை பத்திரிக்கையாளர்கள் கேட்க, அதற்கு இயக்குனர் வெங்கட் பிரபு பதில் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் முக்கியமானவர் விஜய். தற்போது அரசியல்வாதியாக புதிய அவதாரம் எடுத்துள்ள இவர், கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு முழு நேர அரசியலில் கவனம் செலுத்த உள்ளதாக அறிவித்துள்ளார். அந்த வகையில் லியோ படத்திற்கு பின் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
விஜயுடன், பிரபுதேவா, பிராஷாந்த், அஜ்மல், மைக் மோகன், மீனாட்சி, சினேகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வரும் செப்டம்பர் 5-ந் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அவ்வப்போது பாடல்கள் மற்றும் புதிய அப்டேட்களை படக்குழு வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில், வரும் செப்டம்பர் 5-ந் தேதி வெளியாக உள்ள தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் திரைப்படம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழுவினர், படத்தின் ஆடியோ எபிக்யூ (EPIQ) தொழில்நுட்பத்தில் வெளியாகும் என்று அறிவித்துள்ளது. படத்தின் பாடல்கள் கவனம் ஈர்க்கவில்லை என்றாலும், இந்த மாதிரியான படத்தின் அப்டேட்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
இதனிடையே படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இதில் காந்தி என்ற கேரக்டரில் நடித்துள்ள நடிகர் விஜய், மது அருந்துவது போன்ற காட்சியில் நடித்துள்ளார். டிரெய்லர் வெளியீடு குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய, இயக்குனர் வெங்கட் பிரபுவிடம், காந்தி கலவரம் செய்கிறார் என்பது தான் படத்தின் ஒன்லைனா? காந்தி என்று பெயர் வைத்துக்கொண்டு மது அருந்தலாமா என்று பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.
இதற்கு பதில் அளித்த வெங்கட் பிரபு, காந்தி என்று பெயர் வைத்தாலே மது அருந்த கூடாதா? அவர் மகாத்மா காந்தி என்றும் மகாத்மா தான். அவரை இவருடன் ஒப்பிட்டது மோசமானது. என் நண்பன் பெயரும் காந்தி தான். அவன் என்னென்ன செய்கிறான் தெரியுமா அதை வெளியில் சொல்ல முடியாது. அவ்வளவு கெட்டவன் அவன். அதேபோல் காந்தி எதற்காக கலவரம் செய்ய வேண்டும்? நான் டிரெய்லரிலேயே ஃபுல் கதையையும் சொல்லி இருக்கிறேன்.
அடுத்து விஜயகாந்த் வருகிறார் என்று சொன்னார்கள் அவர் வருகிறாரா? என்ற கேள்விக்கு, எல்லாமே கேட்டுவிடுங்கள் யார் யார் படத்தில் இருக்க வேண்டும்? படத்தில் இருக்கும் சர்ப்ரைஸ் எல்லாம் வரிசையாக கேட்டுவிடுங்கள் நாங்க சொல்லிக்கொண்டே இருக்கிறோம் என்று சொன்ன வெங்கட் பிரபுவிடம், டிரெய்லரின் கடைசியில் முப்பாட்டன் முருகன் பாடல் வருகிறதே அது அரசியல் ரீதியான ஒரு விஷயமாக என்று கேட்க, இது கில்லி ரீதியான ஒரு விஷயம் என்று கூறியுள்ளார் வெங்கட் பிரபு.
தொடர்ந்து பேசிய, வெங்கட் பிரபு, கோட் டிரெய்லரை அஜித் சாருக்கு அனுப்பினேன். அதை பார்த்தவிட்டு, சூப்பரா இருக்குடா.. விஜய்க்கு உன் டீம் எல்லோருக்கும் வாழ்த்துக்கள் சொல்லிடுடா என்று மெசேஜ் அனுப்பியதாக கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“