சென்னையில் நடைபெற்ற விடுதலை 2 படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில், இயக்குனர் வெற்றிமாறன், பேசும்போது ஒருவர் குறுக்கிட்டதால், கோபமான அவர் மைக்கை வைத்துவிட்டு சென்றுவிட்டார். இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான படம் விடுதலை. சூரி கதையின் நாயகனாக நடித்த இந்த படம் பெரிய வெற்றியை பெற்றிருந்த நிலையில், தற்போது இந்த படத்தின் 2-ம் பாகம் தயாராகியுள்ளது. முதல் பாகத்தில் நடித்த சூரி, விஜய் சேதுபதி ஆகியோருடன், மஞ்சுவாரியார், கிஷோர் ஆகியோர் நடித்துள்ள இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
வரும் டிசம்பர் 20-ந் தேதி வெளியாக உள்ள விடுதலை 2 படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், படத்தின் டிரெய்லர் நேற்று (நவம்பர் 26) வெளியானது. அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் வெளியாகியுள்ள இந்த டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ள நிலையில், ஏற்கனவே வெளியான தினம் தினம் பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
விடுதலை 2 படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறந்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் வெற்றிமாறன், பேசும்போது படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். எனது உதவியாளர்கள், தயாரிப்பு உதவியாளர்கள், இவர்கள் அனைவருமே இந்த படம் உருவாக முக்கிய காரணமாக இருந்துள்ளனர். அவர்களின் ஒத்துழைப்பில் தான் இந்த படம் என்று வெற்றிமாறன் பேச, அப்போது அருகில் இருந்த ஒருவர் அவர் பெயர் சொல்லு என்று சொல்கிறார்.
இதை கேட்ட வெற்றிமாறன், டேய் நான் தான் யார் பேரையும் சொல்ல மாட்டேன் என்று சொல்லிட்டேன்ல, ஏன்டா, டீம் அப்படி சொன்ன எல்லோரும் தானடா என்று கேட்டு நன்றி சொல்லிவிட்டு மைக்கை வைத்துவிட்டு சென்றுவிட்டார். வெற்றிமாறனின் இந்த செயலை பார்த்த இளையராஜா விஜய் சேதுபதி இருவரும் ஷாக்கான நிலையில், வெற்றிமாறன் அவர்களுக்கு அருகில் சென்று, தனது நிலையை விளக்கி கூறியுள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது இணைத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“