பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் பிரமாண்டமாக தயாராகியுள்ள சர்தார் படம் தீபாவளியை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது. காஷ்மோரா படத்திற்கு பிறகு கார்த்தி இரட்டை வேடங்களில் கலக்கியிருக்கும் படமாக இது அமைந்திருக்கிறது சர்தார். ஒருவன் எவ்வாறு உளவாளியாக(spy) மாறுகிறான், உளவாளிகள் எவ்வாறெல்லாம் ஆபத்துக்களையும், தடைகளையும் தாண்டி நம் நாட்டிற்காக உழைக்கிறார்கள் என்பதையும், பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்பதால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளையும், இலவசமாக கிடைக்க வேண்டிய தண்ணீர் இன்று காசுக்கு விற்கப்படுவதையும் அதன் பின்னணியில் இருக்கும் உலகளாவிய வியாபாரத்தை பற்றிய உண்மைகளை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது சர்தார்.
அப்பா - மகன் என இரட்டை வேடங்களிலும் மிரட்டியிருக்கிறார் கார்த்தி. குறிப்பாக அப்பாவாக வரும் உளவாளி கார்த்தியின் நடிப்பும், வசனங்களும், உடல்மொழியும் நம்மில் பலரும் அறியாத உளவாளிகளின் வாழ்கையை நம் கண்முன்னே நிறுத்துகிறது. மகனாக வரும் இன்ஸ்பெக்டர் கார்த்தியின் கலகலப்பான நடிப்பும், தன்னை பிரபலபடுத்திகொள்ள அவர் எடுக்கும் முயற்சிகளும் ரசிக்க வைக்கின்றன.
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல கதாபாத்திரத்தை ஏற்று அதனை சிறப்பாக செய்திருக்கிறார் லைலா. காதல், பாடல், நடனம் என அக்மார்க் தமிழ் நாயகிக்கு தேவையானவற்றை கச்சிதமாக வழங்கியிருக்கிறார் நாயகி ராஷிகண்ணா. குழந்தை நட்சத்திரமாக வரும் ரித்திக்கின் நடிப்பு வியக்கவும், நேசிக்கவும் வைக்கிறது. ஜி.வி.பிரகாஷின் இசை பல இடங்களில் படத்தின் விறுவிறுப்பிற்கு பலம் சேர்த்தாலும், பாடல்கள் பெரிய அளவில் ரசிக்கும்படி அமையவில்லை என்பது வருத்தம்.
மேலும் இப்படத்தில் நடித்துள்ள மற்ற கதாபாத்திரங்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இதுபோன்ற ஒரு நல்ல சமூக கருத்துள்ள கதையை மிகவும் ஆழமாக ஆராய்ந்து அதனுள் இருக்கும் அத்தனை தவறுகளையும், பாதிப்புகளையும், ரசிக்கும் படியாகவும், விறுவிறுப்பாகவும், அனைவருக்கும் புரியும்படியும் திரைக்கதை அமைத்து மக்களின் பாராட்டுகளை அள்ளுகிறார் இயக்குனர் பி.எஸ் மித்ரன். படத்தின் ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் பாராட்டும்படி அமைந்துள்ளது மொத்தத்தில் சர்தாருக்கு மனமார்ந்த சல்யூட்
நவீன் குமார்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil