தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள எம்.ஜி.ஆர், பலருக்கும் இக்கட்டான சூழ்நிலையில் உதவி செய்துள்ளர் என்பது பலரும் அறிந்த ஒன்று. அதே சமயம் தன்னுடன் இருப்பவர்களுக்காக எதையும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை கொண்டவர் தான் எம்.ஜி.ஆர் என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கிறது. இதில் தனனுடன் சாப்பிட வந்த ஒருவருக்காக சாப்பிடாமல் காத்திருந்த எம்.ஜி.ஆர் குறித்து பார்க்கலாம்.
சினிமா அரசியல் மட்டுமல்லாமல், மக்களின் இதயத்தில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் எம்.ஜி.ஆருக்கு, பாரதரத்னா டாக்டர் உள்ளிட்ட பட்டங்கள் வழங்கப்பட்டிருந்தது. அதேபோல் சினிமாவில் இருந்து அரசியலுக்கு சென்றிருந்தாலும், நல்ல படங்களை பாராட்ட எம்.ஜி.ஆர் எப்போதுமே தவறியது இல்லை. அந்த வகையில் கார்த்தி நடிப்பில் முதன் முதலில் வெளியான அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தை நடிகர் சங்கத்திற்கு சொந்தமான திரையரங்கில் பார்த்துள்ளார் எம்.ஜி.ஆர்.
1981-ம் ஆண்டு வெளியான இந்த படத்தில், கார்த்தி – ராதா இருவரும் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினர். மணிவண்ணன் கதை எழுதிய இந்த படத்தை பாராதிராஜா இயக்கியிருந்தார். இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், படத்தை பார்த்த எம்.ஜி.ஆர் படக்குழுவினர் அனைவரையும் மனம்திறந்து பாராட்டியுள்ளார். அதேபோல் படத்தின் 100-வது நாள் விழாவில் படக்குழுவினர் அனைவருக்கும் வெள்ளி கேடையம் பரிசாக கொடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, எம்.ஜி.ஆருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்ட நிலையில், அதற்காக இயக்குனர் பாரதிராஜா தலைமையில் அவருக்கு ஒரு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, இந்த விழாவில் திரையுலகை சேர்ந்த பலரும் கலந்துகொண்டிருந்துள்ளனர். விழா முடிந்தவுடன் அனைவருக்கும் எம்.ஜி.ஆர் சாப்பாடு ஏற்பாடு செய்துள்ளார். அனைவரும் சாப்பிட அமர்ந்தபோது, எம்.ஜி.ஆர் சாப்பிடாமல் இருந்துள்ளார்.
இதன் காரணமாக மற்றவர்களும் சாப்பிடாமல் எம்.ஜி.ஆர் எப்போது சாப்பிடுவார் என்பது தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற, இயக்குனரும் பத்திரிக்கையாளருமான சித்ரா லட்சுமணன், ஏ.வி.எம்.சரவணன் ஆகியோரும், சாப்பிட அமர்ந்திருந்தபோது, ஏ.வி.எம்.சரவணன் பசியினால் எப்போது சாப்பிடுவோம் என்று காத்திருந்துள்ளார். அப்போது ஒருவர் எம்.ஜி.ஆர் காதில் ஏதோ சொல்ல, அவர் சரி சாப்பிடலாம் என்று கூறியுள்ளார்.
இதை கேட்ட ஏ.வி.எம்.சரவணன், சாப்பிடுவதற்காக தான் எல்லோரும் காத்திருக்கிறார்கள் என்று சொல்ல, இந்த தாமதத்திற்கு நீங்கள் தான் காரணம் என்று கூறியுள்ளார். நாங்களா என்று ஆச்சரியத்துடன் கேட்க, நீங்கள் இருவரும் சைவம் என்பது இப்போது தான் எனக்கு தெரிந்தது. நான் அசைவ உணவு தான் ஆர்டர் செய்திருந்தேன். உங்களை விட்டுவிட்டு நாங்கள் எப்படி சாப்பிடுவது என்று தான் உங்களுக்காக சைவம் வாங்கி வர சொன்னேன் என்று கூறியுள்ளார்.
இந்த விழாவுக்கு நூற்றுக்கணக்கானோர் வந்திருந்தாலும், 2 பேர் சாப்பிட மாட்டார்கள் என்பதால், அவர்களுக்காக மட்டும் தனியாக சாப்பாடு தயார் செய்துள்ளார் எம்.ஜி.ஆர். இந்த தகவலை பத்திரிக்கையாளரும் இயக்குனருமான சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“