வடிவேலுவுடன் ஏய், ரமேஷ் கண்ணாவுடன் உன்னை நினைத்து உள்ளிட்ட பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து அசத்திய நடிகர் மேனேஜர் சீனா தற்போது தான் சினிமாவில் நடிப்பதில்லை என்றும், தனது தற்போதைய வாழ்க்கை குறித்தும் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பி அண்ட் சி மல்லில் 28 வருடங்களாக சூப்பர் வைசர் பணியில் இருந்த சீனிவாச அய்யர், 1975-ம் ஆண்டு வி கோபாலகிருஷ்ணன் இயக்கிய ராஜயோகம் என்ற நாடகத்தின் மூலம் தனது நடிப்பு பயணத்தை தொடங்கியுள்ளார். இந்த நாடகத்தில் மேனேஜர் கேரக்டரில் நடித்திருந்த இவருக்கு பின்னாளில் மேனேஜர் சீனா என்ற பட்டப்பெயர் உருவானது. 3800 நாடகங்களுக்கு மேல் நடித்துள்ள இவர், இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் நாடகங்களில் நடித்துள்ளார்.
தொடர்ந்து சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்த மேனேஜர் சீனாவுக்கு பட வாய்ப்புகள் கிடைத்துள்ளது. இதில் குறிப்பாக ஏய் படத்தில் வடிவேலு ஒரு ஸ்டேம்பை காட்டி இதை பற்றி கேட்கும்போது, அவர் கதையாக சொல்லும் காமெடி காட்சி, அதன்பிறக உன்னை நினைத்து படத்தில் சூர்யாவின் லாட்ஜில் வந்து மாட்டிக்கொள்ளும் கேரக்டர் என காமெடியில் பல படங்களில் நடித்து அசத்திய மேனேஜர் சீனா தற்போது 80 வயதாகும் நிலையில், நடிப்பில் இருந்து விலகியுள்ளார்.
இதனிடையே சமீபத்தில் பிகைண்ட்வுட்ஸ் சேனலில் அவர் அளித்துள்ள பேட்டியில், நான் முதல் முதலாக நடித்த நாடகத்தில் மேனேஜர் கேரக்டரில் நடித்ததால் அன்றில் இருந்து எனது பெயர் மேனேஜர் சீனா என்று ஆனது. மேடை நாடகங்கள் மூலம் தான் எனக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பள்ளி பருவத்தில் இருந்தே நிறைய நாடகங்களில் நடித்திருக்கிறேன். இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் நாடகங்களில் நடித்திருக்கிறேன்.
இப்போதும் படங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறது. ஆனால் நான் நடிக்கவில்லை. வயதாகிவிட்டது வசனத்தை மனப்பாடம் செய்ய முடியாது. நான் தவறாக பேசிவிட்டால் திட்டுவார்கள். என்னடா இவன் இப்படி பண்றான் இவன் சீனியர் நடிகரா என்று கேட்டுவிடுவார்கள். அதனால் தான் நடிப்பை நிறுத்திவிட்டு எனது மகனுடன் வசித்து வருகிறேன். எனக்கு தேவையான பணத்தை நான் நடிக்கும்போதே சம்பாதித்து அக்கவுண்டில் சேர்த்து வைத்துள்ளேன்.
யாரிடமும் கை நீட்டி ஒரு ரூபாய வாங்க வேண்டிய நிலையில் நான் இல்லை. என் மகனிடமே நான் செலவுக்கு பணம் கொடு என்று கேட்கமாட்டேன். ஆண்டவன் இவ்வளவு வயதிலும் என்னை ஆரோக்கியமான நன்றாகத்தான் வைத்திருக்கிறான். இதற்காக கடவுளுக்குதான் நன்றி சொல்ல வேண்டும் என்று மேனேஜர் சீனா தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.