இயக்குனர் தமிழ் இயக்கத்தில் உறியடி புகழ் விஜயகுமார் நடிப்பில் வெளி வந்திருக்கும் "எலக்சன்" படத்தின் முழு விமர்சனம்
கதைக்களம் :
வேலூர் மாவட்டத்தில் உள்ள நல்லூர் என்ற ஊரை சேர்ந்தவர் ஹீரோ நடராசன் (விஜய்குமார்). இவரின் அப்பாவான ஜார்ஜ் மரியான் தமிழ்நாடு மக்கள் கட்சியின் தீவிர தொண்டனாக செயல்பட்டு வருபவர். இவர் ஆதரவளிக்கும் வேட்பாளர் தான் தேர்தலிலேயே வெற்றி பெறும் அளவிற்கு செல்வாக்கானவர். ஆனால் விஜய்குமாரோ அரசியலில் பெரிதாக ஆர்வம் இல்லாதவர்.
இந்நிலையில் தங்கை கணவரின் தூண்டுதலால் வேறு வழியின்றி ஜார்ஜ் மரியாவின் எதிர்ப்பையும் மீறி உள்ளாட்சித் தலைவர் தேர்தலில் நிற்கும் சூழல் ஏற்பட அதனால் நாயகன் சந்திக்கும் விளைவுகள் என்னென்ன? தேர்தலில் அவர் வெற்றி பெற்றாரா ? இல்லையா ? என்பதே படத்தின் மீதி கதை
நடிகர்களின் நடிப்பு :
நாயகன் விஜய்குமாரின் நடிப்பு இயல்பாக அமைந்திருந்தாலும் ஒரு சில இடங்களில் நடிப்பில் சற்று தடுமாறியது போல தோன்றியது. "அயோத்தி" புகழ் ப்ரீத்தி அஸ்ரானிக்கு ஒரு நல்ல அழுத்தமான கதாபாத்திரம். அதை சிறப்பாக செய்துள்ளார். மேலும் ஜார்ஜ் மரியான், பாவில் நவகீதன், நாச்சியார் சுகந்தி திலீபன் ஆகிய துணை கதாபாத்திரங்களும் சிறப்பாக நடித்துள்ளனர்.
இயக்கம் மற்றும் இசை
"சேத்துமான்" படத்தின் மூலம் உணவு அரசியலையும், சாதிய ஒடுக்குமுறையையும் அழுத்தமாக பேசிய இயக்குனர் தமிழ், இம்முறை தேர்தல் அரசியலை கதைக்களமாக தேர்ந்தெடுத்துள்ளார். உள்ளாட்சி தேர்தலை மையமாக வைத்து எழுதப்பட்டு அதை சாதாரண மக்களுக்கும் புரியும் படியாக கதை சொல்லி இருக்கும் விதம் சிறப்பு. கோவிந்த் வசந்தாவின் இசை பல இடங்களில் காட்சிகளை தூக்கி நிறுத்தி இருக்கிறது. பாடல்கள் பெரிதாக எடுபடவில்லை.
படத்தின் பிளஸ்
நுணுக்கமான உள்ளாட்சி தேர்தல் அரசியலை வெளிப்படுத்தி இருக்கும் விதம்
சுவாரஸ்யமான முதல் பாதி
இரண்டாம் பாதியின் டிவிஸ்ட்
கிளைமேக்ஸ் காட்சி
அரசியல் காட்சிகள்
படத்தின் மைனஸ் :
நீளமான வசனங்கள்
வேகத்தடையான பாடல்கள்
அழுத்தமில்லாத வில்லன் கதாபாத்திரம்
மொத்தத்தில் மக்களவைத் தேர்தல் திருவிழா சமயத்தில் இப்படம் வெளிவந்திருப்பது படத்திற்கு கூடுதல் பலம். உள்ளாட்சி தேர்தல் அரசியலை நுணுக்கமாகவும், தைரியமாகவும், வெளிப்படையாகவும் சொல்லி, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக "எலக்சன்" அமைந்திருக்கிறது
நவீன் சரவணன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“