தமிழ் சினிமாவில் மற்ற மொழி நடிகர்களுக்கு பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக, அவர்களுக்கான ரசிகர்கள் பட்டாளமும் இங்கு இருக்கிறது. ஒருவர் சிறப்பாக நடித்துவிட்டால் தமிழ் ரசிகர்கள் அவரை கைவிடமாட்டார்கள் என்பதற்கு பெரிய உதாரணம் நடிகர் பஹத் பாசில்.
மலையாளத்தில் பல வெற்றிப்படங்களை கொடுத்த பஹத் பாசில், 2017-ம் ஆண்டு மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் சைலண்டாக அவர் செய்யும் வில்லத்தனம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. அடுத்து சூப்பர் டீலக்ஸ் படத்தில் சமந்தாவின் கணவராக நடித்தார்.
அதன்பிறகு, கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற விக்ரம் படத்தில் ஏஜெண்ட் அமர் கேரக்டரில் நடித்து அசத்திய பஹத் பாசில், அடுத்து மாமன்னன் படத்தில் சாதிவெறி பிடித்த வில்லன் கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இவருக்கான பேக்ரவுண்ட் இசை, மற்றும் இவரின் காட்சிகள் மாமன்னன் படத்தின் வெளியீட்டின் போது இணையத்தில் வைரலாக பரவியது. அதன்பிறகு ரஜினியுடன் வேட்டையன் படத்தில் நடித்திருந்தார்.
தற்போது நடிகர் வடிவேலுவுடன் இணைந்து மாரீசன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் ஜூலை 25ந் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் கதை என்ன என்பது குறித்து வெளியாகியுள்ளது. அதன்படி, வடிவேலு ஒரு பணக்காரர், அல்சைமர் நோயாளி. வடிவேல் ஏடிஎம்மில் இருந்தபோது பஹத் அவரது பணத்தை கவனிக்கிறார். அவரை நாகர்கோயிலில் இருந்து திருவண்ணாமலையில் பைக்கில் இறக்கிவிடச் சொல்கிறார்.
இந்தப் பயணம்தான் படம். வடிவேலுவிடமிருந்து பஹத்க்கு பணம் கிடைக்கிறதா இல்லையா? என்பது தான் இந்த படத்தின் கதை என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தின் இயக்குனர், சுதீஷ் சங்கர் ஏற்கனவே தமிழில் ஆறுமனமே, மலையாளத்தில் திலீப் நடிப்பில் வில்லாளி வீரன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இந்த படம் அவரின் 3-வது படமாகும். இந்த படத்தில், கோவை சரளா, லிவிங்ஸ்டன், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.