தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் வலம் வந்தவர் தான் எம்.கே.தியாகராஜபாகவதர். இயக்குனர் நடிகர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முக திறமை கொண்ட இவர், நாடக நடிகராக இருந்து 1934-ம் ஆண்டு வெளியான பவளக்கொடி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து 1936-ம் ஆண்டு வெளியான சத்திய சீலன் என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.
அதன்பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்திருந்த தியாகராஜபாகவதர், 1941-ம் ஆண்டு அசோக்குமார் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த சமயத்தில் தியாகராஜபாகவதர் உச்ச நட்சத்திரமாக இருக்க, இப்போது சினிமாவில் தனக்கான வாய்ப்பினை தேடிக்கொண்டிருந்தவர் எம்.ஜி.ஆர். தியாகராஜபாகவதரின் படப்பிடிப்பு நடைபெறும் ஸ்டூடியோவுக்கு அடிக்கடி வந்து செல்லும் எம்.ஜி.ஆரை பார்த்த அவர், இந்த பையன் அடிக்கடி வந்து செல்கிறான். இவனுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என்று நினைத்துள்ளார்.
அதன்படி அசோக் குமார் படத்தில் எம்.ஜி.ஆருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த படத்தில் ராஜாவின் மகனான தியாகராஜபாகவதரிடம், அவரது அப்பாவின் 2-வது மனைவி தவறாக நடந்துகொள்ள, இதை பார்த்த அவரது அப்பா, தியாகராஜபாகவதர் தப்பான நடந்துகொண்டதாக நினைத்து, அவரது கண்களை எடுத்துவிடும்படி உத்தரவிடுவார். அப்போது தியாகராஜபாகவதரின் கண்களை எடுக்கும் பணியாளாக வருபவர் தான் எம்.ஜி.ஆர். ஆனாலும் இந்த படத்தில் அவருக்கு 2 உதவியாளர்கள் இருப்பார்கள்.
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது, இதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்த தியாகராஜபாகவதரிடம், 2-ம் உலகப்போரின்போது, ஆங்கிலேயர்கள் நாடகம் அல்லது திரைப்படங்களில் நடித்து எங்களுக்கு நிதி திரட்டி கொடுக்குமாறு கேட்டுள்ளனர். அதன்படி அவர்களுக்கு பெரும் நிதி திரட்டி கொடுத்த பாகவதரிடம், உங்களுக்கு என்ன வேண்டும் கேளுங்கள் என்று சொல்லி, திருச்சிக்கு அருகில் உள்ள திருவெறும்பூரை கொடுத்துள்ளனர்.
இந்த பரிசை வாங்க மறுத்த பாகவதர், எங்கள் நாட்டை துண்டாக எனக்கே கொடுக்கிறீர்களா? எங்கள் நாட்டுக்கு சுதந்திரம் வேண்டும் என்று கூறியுள்ளார். ஆங்கிலேயரிடமே சவாலாக பேசிய உச்ச நடிகரான தியாகராகபாகவதர், பத்திரிக்கையாளர் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் சிக்கி 2 வருடம் 2 மாதங்கள் சிறை தண்டனை பெற்றதை தொடர்ந்து அவரது புகழ் சரிவை சந்தித்தது. சிறையில் இருந்து விடுதலையான அவர், அதே திறமையுடன் படங்களில் நடித்திருந்தாலும், அந்த படங்கள் எதுவும் வெற்றியை ஈட்டவில்லை. உச்சத்தில் இருந்த தியாகராஜ பாகவதர் 2 வருடங்களில் அதளபாதாளத்தில் விழுந்தது போன்று வீழ்ச்சியை சந்தித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“