சிவாஜி கணேசன் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களில் ஒன்று தில்லானா மோகனாம்பாள். இந்த படத்தில் சிக்கல் சண்முக சுந்தரம் என்ற கேரக்டரில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த சிவாஜி, நாதஸ்வர வித்வானாக கலக்கியிருப்பார். இந்த படத்தின் ஒரு காட்சியில், சிவாஜி நாதஸ்வரம் வாசிக்கும்போது தொடர்ந்து பட்டாசு சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். ஒரு கட்டத்தில் பொறுமை இழக்கும் சிவாஜி இந்த சத்தத்தில் என்னால் வாசிக்க முடியாது என்று சொன்றுவிடுவார்.
சிவாஜி கணேசன் படத்தில் சந்தித்த இந்த பிரச்சனையை, நடிகர் ஜெமினி கணேசன் தனது வாழ்க்கையில் சந்தித்துள்ளது தான் சுவாரஸ்யம். புது வீடு கட்டிய ஜெமினி கணேசன், அதற்காக கிரஹப்பிரவேச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்ச்சிக்காக திரைத்துறையில் இருந்த அனைவரையும் அழைத்திருந்தார். இதில் முதலாவதாக டி.ஆர்.மகாலிங்கத்தின் கச்சேரி நடைபெற்றுள்ளது. அதன்பிறகு வீணை எஸ்.பாலச்சந்தரின் இசைய நிகழ்ச்சி தொடங்கியுள்ளது.
அந்த நேரத்தில், நிகழ்ச்சியில் வீட்டுக்கு வந்த அறிஞர் அண்ணா – கருணாநிதி இருவரும் முன்வரிசையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்துள்ளனர். இதை கவனித்த வீணை எஸ் பாலச்சந்தர், அவர்கள் பேசி முடிக்கட்டும். அதன்பிறகு வாசிப்போம் என்று யோசித்துள்ளார். ஆனால் அவர்கள் இருவருமே பேச்சை நிறுத்தாமல் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்துள்ளனர். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த பாலச்சந்தர் நீங்கள் பேசி முடியுங்கள் அதன்பிறகு நான் வாசிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
அவர் பேச்சை கேட்டு அரங்கமே அமைதியாக மாறியது. பாலச்சந்தரின் இந்த சொன்னதை கேட்ட ஜெமினி கணேசன், அண்ணாவும் – கருணாநிதியும் என்ன நினைப்பார்களே என்ற பதற்றத்தில் ஓடி வந்துள்ளார். ஆனால் அமைதியாக எழுந்த கருணாநிதி, எங்கள் பேச்சு உங்கள் இசைக்கு தொந்தரவாக இருந்திருந்தால் அதற்காக நாங்கள் வருத்தம் தெரிவிக்கிறோம். நீங்கள் உங்கள் இசை நிகழ்ச்சியை நடத்துங்கள் நாங்கள் எங்கள் பேச்சை நிறுத்திவிடுகிறோம் என்று கூறியுள்ளார்.
அதன்பிறகு இசை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றுள்ளது. ஒரு இசை கலைஞரின் உணர்வுக்கு அண்ணாவும் கருணாநிதியும் எவ்வளவு மரியாதை கொடுத்தார்கள் என்பதை இதில் இருந்து தெரிந்துகொள்ளலாம் என்று இயக்குனரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“