மணிகண்டன் மற்றும் ரமேஷ் திலக்கின் நடிப்பில் வெளியான “Good Night” திரைப்படம், மக்களை துங்கவைத்ததா? அல்லது ரசிக்க வைத்ததா ? என்பதை பார்ப்போம்.
கதைக்களம் :
ஐ.டி.யில் வேலை செய்யும் ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தை சார்ந்த இளைஞராக வருகிறார் நாயகன் மணிகண்டன். அவருக்கு மிகப்பெரிய அளவில் குறட்டை விடும் பிரச்சனை இருக்கிறது. இதனால் அவருக்கு பல அவமானங்கள் ஏற்படுகிறது. மேலும் தன்னுடைய காதலியும் இந்த குறட்டை பிரச்சனைக்காக தன்னை விட்டு பிரியவே மனமுடைகிறார் மணிகண்டன். அதன் பிறகு நாயகியின் மீது காதல் கொண்டு, தன்னுடைய குறட்டை பிரச்சனையை மறைத்து அவரை திருமணம் செய்கிறார். ஆனால் திருமணம் அன்று இரவே மனைவிக்கு,இவருடைய குரட்டை பிரச்சினை பற்றி தெரிய வருகிறது. அதன்பிறகு மணிகண்டன் வாழ்வில் என்ன நடக்கிறது? என்பதை சுவாரசியமாக சொல்லி இருக்கும் படமே “Good Night”.
நடிகர்களின் நடிப்பு :
கதையின் நாயகனாக வரும் மணிகண்டனின் எதார்த்தமான நடிப்பு நம்மை வியக்க வைக்கிறது. நம் வீட்டில் இருக்கும் ஒருவருக்கு இப்பிரச்சினை இருந்தால் அவர் எப்படி இருப்பாரோ, அதை தான் மணிகண்டன் திரையில் பிரதிபலிப்பது போல, அவ்வளவு எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பல இடங்களில் அவருடைய காமெடி காட்சிகள் நம்மை ரசிக்க வைக்கிறது. மேலும் மணிகண்டனின் மாமாவாக வரும் ரமேஷ் திலக்கின் நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலம். அதே போல் தாத்தா பாட்டியாக நடித்துள்ள இயக்குனர் பாலாஜி சக்திவேல், கெளசல்யா நடராஜன், உள்ளிட்டோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக செய்துள்ளனர். அமைதியான, அப்பாவியான பெண்ணாக வரும் நாயகி மீதா ரகுநாத் நடிப்பில், அடுத்த கட்டத்திற்கு சென்றிருக்கிறார்.
இயக்கம் மற்றும் இசை :
ஒரு சாதாரணமான வாழ்வில் பிரச்சனையை மையமாக வைத்து அதில் இயல்பான, எதார்த்தமான திரைக்கதை அமைத்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் இயக்குனர் விநாயக் சந்திரசேகர். மேலும் பல எமோஷனலான காட்சிகளையும் காமெடி கலந்து நகைச்சுவையாக சொன்ன விதத்தில் கவனம் ஈர்க்கிறார்.பின்னணி இசை அழகாகவும், படத்திற்கு தேவையான அளவும் அமைந்திருக்கிறது. பாடல்கள் சுமார்.
படம் எப்படி?
நாம் அன்றாடம் கடந்து செல்லும் ஒரு சாதாரண கதையை வைத்துக்கொண்டு திரில்லர், ஆக்சன், ரொமான்ஸ் என எதுவும் இல்லாமல் நகைச்சுவையும், மக்களின் எதார்த்த உணர்வுகளையும் கலந்து திரைக்கதை அமைத்து அதை ரசிக்கும் படியாக மக்களுக்கு கொடுத்திருப்பதே படத்தின் மிகப்பெரிய பலம்.அது மட்டுமில்லாமல் நடிகர்களின் தேர்வும் சிறப்பாக அமைந்திருப்பதால், நம் வீட்டில் அல்லது நம் பக்கத்து வீட்டிலோ நடப்பது போல ஒரு உணர்வை இப்படம் ஏற்படுத்துகிறது.
மொத்தத்தில் குடும்பத்துடன் கண்டு மகிழத்தேவையான அத்தனை விஷயங்களும் உள்ளடக்கிய ஒரு பீல் குட் படமே இந்த “Good Night”.
நவீன் சரவணன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“