தமிழ் சினிமாவில் சிறு பட்ஜெட்டில் படம் எடுத்து ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு டஃப் கொடுத்த இயக்குனர் தான் வி.சேகர். இவர் முதன் முதலில் கவுண்டமணி செந்தில் வைத்து படம் இயக்கிய அனுபவத்தை ஒரு நேர்காணலில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
1990-ம் ஆண்டு வெளியான நீங்களும் ஹீரோதான் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தான் வி.சேகர். நிழல்கள் ரவி, சில்க் ஸ்மிதா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருந்த இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிப்படமாக அமைந்துது. அதன்பிறகு, நான் புடிச்ச மாப்பிள்ளை, ஒன்னா இருக்க கத்துக்கணும், வரவு எட்டனா செலவு பத்தனா, காலம் மாறிப்போச்சு உள்ளிட்ட பல படங்களை இயக்கி வெற்றி கண்டார்.
தான் இயக்கிய முதல் 7 படங்களில் 6 படங்கள் கவுண்டமணி செந்தில் காம்போவை வைத்து காமெடியில் கலக்கி இருப்பார் வி.சேகர். பெரும்பாலும் இவர் இயக்கிய படங்கள் பெண்களுக்கும், குடும்பத்தற்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். இவர் இயக்கிய முதல் படமான நீங்களும் ஹீரோதான் படத்தில் கவுண்டமணி, செந்தில் எப்படி நடிக்க ஒப்புக்கொண்டார்கள் என்பது குறித்து பேசியுள்ளார்.
கவுண்டமணி செந்தில் இருவருக்கும் 6 நாட்களுக்கு 5-6 லட்சம் சம்பளம் கொடுத்தோம். அதற்கு மேல் கொடுக்க பணம் இல்லை. அப்போது ஒரு பி.ஆர்.ஓ இந்த படம் முழுவதும் கவுண்டமணி செந்திலுக்கு வேலை இருக்கா என்று கேட்க, அவர்களுக்கு சம்பளம் கொடுக்க காசு இல்லை என்று சொன்னேன். அப்போது அவர் நீ கம்முனு இரு, செந்தில் கவுண்டமணி காட்சிகளை முதலில் படமாக்கு என்று சொல்லிவிட்டு, கேமராமேன், உதவியாளர்கள் என யூனிட்டில் இருந்த அனைவரிடமும் சேர் சீன் எடுக்கிறார் நல்லாருக்கா என்று கேட்டார்.
அவர்கள் அனைவரும் நல்லாருக்கு சார் இங்கேயே சிரிப்பு வருகிறது என்று சொல்ல, சிரிச்சா மட்டும் போதுமா நல்ல கையை தட்டுங்கயா அப்போதான் அந்த நடிகர்களுக்கு புரியும் என்று சொன்னார். அதேமாதிரி சீன் எடுக்கும்போது அவர்கள் கைதட்டினார்கள். இதை பார்த்த கவுண்டமணி செந்தில் இருவரும், இந்த பையன் காமெடி சூப்பரா பண்ணுவான் போல என்று பேசிக்கொண்டார்கள். அப்போது அந்த பி.ஆர்.ஓ. இந்த பையன் பாக்யராஜூவை தாண்டி வருவான், ஒரு 5-6 நாள் கால்ஷீட் கொடுத்த பாட்டு எல்லாம் வச்சி சூப்பரா பண்ணிடலாம் என்று சொன்னார்.
அதை கேட்ட கவுண்டமணி செந்தில் இருவரும் மேலும் 6 நாட்கள் சம்பளம் இல்லாமல் கால்ஷீட் கொடுத்து நடித்தனர். அதன்பிறகு படம் முழுவதும் அவர்கள் வருவது போன்று காட்சிகள் வைத்து அந்த படத்தை வெற்றிப்படமாக மாற்றிவிட்டேன் என்று வி.சேகர் கூறியுள்ளார்.