Advertisment

வித்தியாசமான கதைக்களம் ஜீவிக்கு வெற்றியை கொடுத்ததா? அடியே விமர்சனம்

ரியல் vs ஆல்டர்நேட்டீவ் யூனிவர்ஸ் (Real vs Alternative Universe) இரண்டையும் எப்படி சமாளித்தார் ஜி.வி பிரகாஷ் ?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Jeevi

ஜீ.வி.பிரகாஷ்

ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் Science Fiction படமான "அடியே" மக்களைக் கவர்ந்ததா?

Advertisment

கதைக்களம் :

எளிமையான இளைஞனாக இருக்கும் ஜீவா (ஜி.வி.பிரகஷ்குமார்)  தன்னுடன் பள்ளியில் ஒன்றாக படித்து தற்போது பாடகியாக இருக்கும் செந்தாழிணியை ஒருதலையாக காதலிக்கிறார். ஜீவா தன் காதலை சொல்ல வரும்போது எதிர்பாராத விதமாக விபத்து நடக்கிறது. ஜீவா மீண்டும் கண் விழித்து பார்க்கும் போது மற்றொரு உலகில் அதாவது, Parallel Universe என்ற கான்செப்ட்இல், அவர் ஆஸ்கர் விருது வாங்கிய மாபெரும் இசை அமைப்பாளராகவும், கௌரி கிஷன் அவருடைய மனைவியாகவும் இருக்கிறார்.இது எப்படி சாத்தியமானது ?  இந்த Real vs Alternative Universe இரண்டையும் எப்படி சமாளித்தார்  ஜி.வி பிரகாஷ் ? என்பதை கலகலப்பாக சொல்லி இருக்கும் படமே "அடியே".

நடிகர்களின் நடிப்பு :

ஜி.வி பிரகாஷ் படங்களிலேயே சற்று வித்தியாசமான கதைகளம் கொண்ட படமாக இப்படம் அமைந்திருக்கிறது. அதற்கு ஏற்றார் போல ஜி.வி.பிரகஷும் தன்னுடைய நடிப்பில் மெருகேரி இருப்பது திரையில் நன்றாக தெரிகிறது. காதலியிடம் காதலை சொல்ல முடியாத ஏக்கம், வெறுப்பு மகிழ்ச்சி, காதல் என அனைத்து எமோஷனல்களையும் அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். பொதுவாக இவருடைய படங்களில் காமெடிகள் இருக்கும் ஆனால் இப்படத்தில் அவை அதிக அளவில் இருக்கிறது அதையும் கச்சிதமாக செய்திருக்கிறார்.

நாயகியான கௌரிக்கு "96"படத்திற்கு பிறகு ஒரு சிறப்பான ரோலாக இப்படம் அமைந்திருக்கிறது. படம் முழுவதும் தன்னுடைய நடிப்பு திறனை அழகாகவும், ரசிக்கும்படியாகவும் வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார். வெங்கட் பிரபுவுக்கு ஒரு வித்தியாசமான ரோல் என்று சொல்லலாம். நிகழ்காலத்தில் Scientist ஆகவும் Parallel Universe'ல் கௌதம் மேனனாகவும் பங்கம் செய்து இருக்கிறார். அவருடைய காமெடி காட்சிகள் பல இடங்களில் படத்தை தூக்கி பிடித்து இருக்கிறது. ஜீவியின் நண்பனாக வரும் மிர்ச்சி விஜய்யும் தனது கலகலப்பான நடிப்பால் ரசிகர்களை ஈர்க்கிறார். மேலும் நிகழ்கால பிரபலங்களை குறிக்கும் பல கேரக்டர்கள் படத்தில் இடம்பெற்றுள்ளது சிறப்பு.

இயக்கம் மற்றும் இசை:

"திட்டம் இரண்டு" என்ற வித்தியாசமான படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான விக்னேஷ் கார்த்திக் இப்படத்தில் Parallel Universe என்ற மற்றொரு புதுமையான கான்செப்ட்டை கையில் எடுத்திருக்கிறார். இன்று நேற்று நாளை, மாநாடு போன்ற சயின்ஸ் பிக்சன் படங்கள் வெற்றி அடைய மிக முக்கியமாக காரணமாக அமைந்தது அப்படத்தில் இடம்பெற்ற காமெடிகள். அதை சரியாக புரிந்து கொண்ட இயக்குனர் இப்படத்திலும் காமெடி காட்சிகளை தூக்கலாக வைத்திருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலம். அதேபோல இப்படத்தின் கான்செப்ட் மக்களுக்கு புரிய வைப்பது என்பது ஒரு கடினமான விஷயம்.

ஏனென்றால் முதல் பாதியில் நாம் எந்த யுனிவர்சில் இருக்கிறோம் என்று குழப்பம் அளவிற்கு திரைக்கதை அமைந்திருக்கிறது. ஆனால் அதற்கு அவர் இரண்டாம் பாதியில் கொடுத்திருக்கும் விளக்கத்திற்கு மிகப்பெரிய பாராட்டுக்கள். ஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி  இசை படத்திற்கு தேவையான அளவு அமைந்திருக்கிறது. பாடல்கள் ஏற்கனவே பிரபலமாகியுள்ளதால் அது படத்திற்கு கூடுதல் பலம்.

படம் எப்படி ?

படத்தின் ஆரம்பக் காட்சிகளில் நாம் ஒரு வித்தியாசமான படத்தை பார்க்கப் போகிறோம் என்ற உணர்வை ரசிகர்களுக்கு கொடுத்து விடுகிறது. Alternative Universe என்ற கான்செப்ட் தொடங்கிய பிறகு காமெடி சரவெடிகள் நம்மை மூழ்கடிக்க செய்கின்றன.அதாவது Reality'யில்  உள்ள பிரபலங்களை, Alternative Reality-யில் வேறொரு பிரபலமாக சித்தரிக்கும் இடங்கள் கலகலப்பின் உச்சம்.பிரபுதேவா ஏஆர் ரஹ்மனாக மாறுகிறார், ஏஆர் ரஹ்மான் டான்ஸ் மாஸ்டராக மாறுகிறார், இயக்குநர் மணிரத்னம் கிரிக்கெட் ப்ளேயர், சச்சின் ஃபுட்பால் ப்ளேயர், அஜித் கார் ரேஸர், கேப்டன் விஜயகாந்த் இந்திய பிரதமர் என கற்பனை உலகில் கண்டமேனிக்கு காமெடி செய்திருக்கிறார்கள்.

மேலும் இயக்குனர் மிஷ்கின்,அட்லி, பைல்வான் ரங்கநாதன் ஆகியோரை கலாய்த்திருக்கும் விதம் ரசிகர்களுக்கு ஜாலியான விருந்தை கொடுத்திருக்கிறது. காமெடி காட்சிகள் படத்திற்கு மிகப்பெரிய பலம் என்றாலும் இரண்டாம் பாதியில் திரைக்கதை சற்று பின்னடைவு என்றே சொல்லலாம். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சிகள் இன்னும் சிறப்பாக அமைந்திருந்தால் ஒரு சிறப்பான என்டர்டைனரை பார்த்த திருப்தியை ரசிகர்களுக்கு கொடுத்திருக்கும்.

மொத்தத்தில் லாஜிக் இல்லாமல் நண்பர்கள், குடும்பங்களுடன் சேர்ந்து பார்க்க ஏதுவான ஒரு வித்தியாசமான பொழுதுபோக்கு திரைப்படம் தான் இந்த "அடியே".

- நவீன் சரவணன்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Gv Prakash
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment