மரகத நாணயம் என்னும் வெற்றி படத்திற்கு பிறகு சரவணன் அதே பேண்டஸி கான்செப்டில் ஆதியை வைத்து எடுத்திருக்கும் "வீரன்" படத்தின் விமர்சனம்.
கதைக்களம் :
வீரனூர் கிராமத்தில் வாழும் குமரனுக்கு(ஆதி) 15 வயதில் பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது மின்னல் அவரை தாக்குகிறது, பின்பு மருத்துவமனையில் சேர்த்தாலும் அவருக்கு சுய நினைவு திரும்பவில்லை. இதனால் அவரை சிங்கப்பூருக்கு அழைத்து செல்கின்றனர். மின்னல் தாக்கியதால் குமரனுக்கு சில சக்திகளும் கிடைக்கிறது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு வீரனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமத்தில் வில்லன் வினையின் கும்பல் மின்சாரம் தயாரிப்பதற்காக மண்ணுக்கடியில் கம்பிகளை பதிக்கின்றனர், இந்த கம்பி வெடித்தால் அந்த ஊரே தரைமட்டம் ஆகிவிடும் என்பது குமரனுக்கு தெரிய வர, தனக்கு கிடைத்த சக்திகளை வைத்து வீரனூர் கிராமத்தை குமரன் எப்படி காப்பாற்றுகிறார் என்பதே வீரன் படத்தின் கதை.
நடிகர்களின் நடிப்பு:
ஹிப் ஹாப் ஆதி தனது கலகலப்பான நடிப்பின் மூலம் கலக்கியிருக்கிறார். அவர் சூப்பர் ஹீரோவாக மாறும் காட்சிகள், குழந்தைகளை மிகவும் கவரும் என்பது உறுதி. அது மட்டுமல்லாமல் அவருடைய சண்டை காட்சிகளும், காமெடி காட்சிகளும், சூப்பர் ஹீரோ ஆன பிறகு அவர் செய்யும் சாகச காட்சிகளும் பெருமளவு ரசிக்க வைக்கிறது. நாயகி ஆதிரா ராஜுவிற்கு முதல் படம் என்பதால் நடிக்கும் வாய்ப்புகள் குறைவாகவே அமைந்திருக்கிறது.
நக்கலைட்ஸ் சசி, செல்வா ஆகியோருக்கும் ஒரு நல்ல ரோல் கிடைத்திருக்கிறது அதை மட்டும் அல்லாமல் காளி வெங்கட், முனிஷ்காந்த் ஆகியோரின் காமெடி காட்சிகள் பெருமளவில் ஒர்க் அவுடாகியிருக்கிறது. வில்லன் வினய் கிளைமாக்ஸ் காட்சிகளில் மட்டுமே வந்தாலும் படத்திற்கு தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார். மேலும் அத்தனை துணை நடிகர்களின் நடிப்பும் சிறப்பாக அமைந்திருக்கிறது.
இயக்கம் மற்றும் இசை:
ஏற்கனவே மரகத நாணயம் என்ற பேண்டஸி படத்தை ரசிக்கும் படியாக நமக்கு கொடுத்த சரவணன் அதே பேண்டஸி பாணியை இப்படத்திலும் கையாண்டிருக்கிறார். நம்மூர் ரசிகர்களுக்கு ஏற்றார் போல பேண்டஸி கதையை உள்ளூர் தெய்வங்களுடன் இணைத்து அவர் பயன்படுத்தியிருக்கும் விதம் ரசிக்கும் படியாகவும், நம்பும் படியாகவும் அமைந்திருக்கிறது. ஹிப் ஹாப் தமிழாவின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம்.சூப்பர் ஹீரோ கான்செப்ட்டிர்க்கு தேவையான குதூக்கலமான இசையை அமைத்து படத்தை ஜாலியாக ரசிக்க உதவுகிறார்.
படம் எப்படி?
இதுபோன்ற கதைக்களம் தமிழ் சினிமாவிற்கு புதிதாக இருந்தாலும், அந்த புதுமையான கதைக்களத்தை நம்பும் படியான காட்சிகள் மூலம் கொடுத்திருப்பது படத்திற்கு மிகப்பெரிய சிறப்பு. பல இடங்களில் காமெடி காட்சிகளும், சென்டிமென்ட் காட்சிகளும் அனைத்து வயதினரையும் கவர்ந்திருக்கிறது. படத்தின் சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும் ஒரு பேண்டஸி கதைக்கு தேவையான நியாயத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர். படத்தின் இரண்டாம் பாதியின் நீளத்தை சற்று குறைத்தால் படம் இன்னும் பெருமளவில் ஈர்க்கப்படும் என்பது உறுதி.
மொத்தத்தில் குடும்பத்துடன் சென்று ரசிக்கும் படியான ஒரு ஜாலியான படமாக அமைந்திருக்கிறது இந்த வீரன்.
- நவீன் சரவணன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.