கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கும் கனவு போராட்டம் எம்.ஜி.ஆர் காலம் முதல் சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை தொடர்ந்து கொண்டிருந்தது. அந்த கனவை மணிரத்னம் என்னும் ஜாம்பவான் கையிலெடுத்து, திரைப்படமாக்கி தமிழர்களின் பெருமையையும், வலிமையையும் உலகறியச் செய்யும் வகையில், உருவாக்கியுள்ள இத்திரைப்படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்குகிடையே இன்று வெளியாகியுள்ளது.
சோழர்களின் வரலாற்றை எடுத்துரைக்கும் இப்படத்தின் திரைக்கதை பொன்னியின் செல்வன் நாவலை படிக்காதவர்களுக்கு மட்டுமல்லாமல் படித்தவர்களுக்கும் சுவாரசியத்தை கொடுத்துள்ளதே இப்படத்தின் மாபெரும் வெற்றியினை எளிதாக்கியுள்ளது. இதன் மூலம் தான் தமிழ் மட்டுமல்லாது இந்திய சினிமாவின் தலை சிறந்த இயக்குனர்களில் ஒருவர் என்பதை மீண்டும் ஒருமுறை உரக்க சொல்லி இருக்கிறார் மணிரத்னம்.
எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் இளங்கோ ஆகியோரின் பங்களிப்பு திரைக்கதைக்கு மிகவும் பலம் சேர்த்திருக்கிறது. வந்தியதேவனாக வரும் கார்த்தி முதல் பாதியில் பெருமளவில் ரசிகர்களை தன் எதார்த்தம் கலந்த கலகலப்பான நடிப்பால் ஈர்க்கிறார். நம்பியுடம் அவர் வரும் காட்சிகளில் எல்லாம் கலகலப்பு.”ஆதித்ய கரிகாலனாக” வரும் விக்ரம், அரசனுக்கான உடல்மொழியாலும், வீரமான நடிப்பாலும் மெய்சிலிர்க்க வைக்கிறார்.
நந்தினியை நினைத்து அவர் பேசும் இடங்களில் காதலின் வலியையும், கோவத்தையும் ஒன்றுசேர்த்து கலங்கடிகிறார். “நந்தினி”யாக வரும் ஐஷ்வர்யா ராய் அழகின் உச்சம், பல இடங்களில் தன் கண்களாலேயே மிரட்டியிருக்கிறார். சோழர்களை வீழ்த்த இவர் செய்யும் வஞ்சனைகளும், சூழ்ச்சிகளும் எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது. அழகு ராணி “குந்தவை”யாக வரும் த்ரிஷாவின் காட்சிகள் அனைத்தும் கவித்துவம்.
“அருள்மொழிவர்மனாக” வரும் ஜெயம் ரவி அரசனாகவே வாழ்ந்திருக்கிறார். கார்த்தி – ஜெயம் ரவி மோதும் சண்டை காட்சிகள் மிரட்டல்.பெரிய மற்றும் சின்ன “பழுவேட்டரையர்”களாக வரும் சரத்குமார் மற்றும் பார்த்திபனின் நடிப்பு கம்பீரம். மேலும் பிரபு, விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ், ஜெயராம், பவித்ர லட்சுமி ஆகியோரின் நடிப்பு கணக்கசிதம். நாவலில் இல்லாத ஹீரோவாக “ஏ.ஆர். ரஹ்மான்” திகழ்கிறார்.
இப்படத்தின் பாடல்களும், அதை காட்சிபடுத்திருக்கும் விதமும், நம் பண்டைய தமிழர்களின் கலாச்சாரத்தை அழகையும், வீரத்தையும் பிரதிபலிக்கிறது. படத்தின் பின்னணி இசைக்காக பல ஆராய்ச்சிகள் செய்து, நாம் மறந்த பல இசைவாத்தியங்களை பயன்படுத்தி அவர் படைத்திருக்கும் இசை விருந்திற்கு மற்றுமொறு “ஆஸ்கர்”கிடைத்தாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை.
ரவி வர்மணின் ஒளிப்பதிவும், கிளைமேக்ஸ் காட்சிகளை படமாக்கியிருக்கும் விதமும் சோழ தேசத்திற்கே நம்மை அழைத்துச்செல்கிறது. இதில் நடித்த, பணியாற்றிய அனைவரும் படத்திற்காக கடுமையாக உழைத்திருப்பது திரையில், படத்தின் பிரமாண்டத்தை கொண்டாட வைக்கிறது. ஆர்.ஆர்.ஆர், கே.ஜி.எப்,புஷ்பா போன்ற மற்ற மொழி படங்களை கொண்டாடிய நாம்,அதற்கும் பிரமாண்டமாக இப்படத்தை கொண்டாடி பெருவெற்றியை கொடுப்பதே அவர்களின் உண்மையான உழைப்பிற்கும், இதுபோன்று நம்மை பெருமைப்படுத்தும் படத்தை எடுத்ததற்கு நாம் கொடுக்கும் பரிசாகும்.
நவீன்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil