கமல்ஹாசன் நடிப்பில் தயாராகி வரும் இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படத்தின் மெயின் வில்லன் யார் என்பது தொடர்பான தகவல் தற்போது வைரலாகி வருகிறது.
Advertisment
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் தயாராகி வரும் படம் இந்தியன் 2. கடந்த 1996-ம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தில் தொடர்ச்சியாக தயாராகி வரும் இந்த படத்தில் கமல்ஹாசனுடன், விவேக், சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானிசாகர், குரு சோமசுந்தரம், பாபி சிம்ஹா, மனோபாலா, சமுத்திரக்கனி, ஜார்ஜ் மரியான், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பெரும் நட்சத்திரக் கூட்டம் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வருடங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த வருடம் படம் திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் பல முக்கிய நடிகர்கள் நடித்து வருவதால் படத்தில் மெயின் வில்லன் யார் என்பது தொடர்பான கேள்வி ரசிகர்கள் மத்தியில் பெரும் கேள்வியாக எழுந்துள்ளது.
இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலின் படி படத்தில் மெயின் வில்லன் எஸ்.ஜே.சூர்யா என்று தெரியவந்துள்ளது. இந்தியன் 2 படத்தில் அவர் தனது காட்சிகள் அனைத்தையும் நடித்து முடித்துவிட்டதாகவும், ரசிகர்களுக்கு சர்ப்ரைசாக இந்த தகவலை வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படும் நிலையில், எஸ்.ஜே.சூர்யாவின் திரை வாழ்க்கையில் இந்த படம் முக்கியமானதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே மெர்சல் படத்தில் விஜய்க்கும், மாநாடு படத்தில் சிம்புவுக்கும் வில்லனாக கலக்கிய எஸ்.ஜே.சூர்யா தற்போது கமல்ஹாசனுக்கே வில்லனாக மாறியுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியன் 2 படத்திற்கு ரத்னவேலு, ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“