Tamil Cinema Industry : Directors and actors take voluntary Pay Cut
Tamil Cinema Industry : Directors and actors take voluntary Pay Cut : கொரோனா வைரஸ் தீவிரமடைந்த நிலையில் பல்வேறு தொழில்களில் பெரும் பாதிப்பு நஷ்டமும் ஏற்பட்டு வருகிறது. மற்ற துறைகளைப் போன்று சினிமா துறையிலும் இது மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் கடந்த ஐம்பது நாட்களுக்கும் மேலாக எந்தவிதமான பணிகளும் நடைபெறவில்லை. அதேபோன்று திரையரங்குகள் இயங்காமல், படங்கள் வெளி வர இயலாமல் கிடப்பில் போட்ட படியே இருக்கிறது.
Advertisment
விஜய் ஆண்டனி
இந்நிலையில் தயாரிப்பாளர்கள் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். தயாரிப்பாளர்களின் நஷ்டத்தில் பங்கேற்கும் விதமாக தமிழ் திரையுலகினர் பலரும் தங்களின் சம்பள பணத்தினை குறைக்கும் முடிவில் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.
இதற்கு முன்னோடியாக திகழ்ந்தவர் விஜய் ஆண்டனி தான். கடந்த நான்காம் தேதி தன்னுடைய, வெளிவர இருக்கும் மூன்று படங்களுக்கான சம்பள பணத்தை 25% குறைத்துக் கொள்ளுமாறு தயாரிப்பாளர்களிடம் வேண்டுகோள் வைத்தார். கொலைகாரன், பிச்சைக்காரன் போன்ற அவருடைய படங்களுக்கு தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. அடுத்ததாக தமிழரசன், அக்னி சிறகுகள் மற்றும் காற்று ஆகிய மூன்று படங்களை அவர் நடித்து வருகிறார். இவருடைய இந்த அறிக்கைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து இருந்தனர்.
தாராள பிரபு படத்தின் வெற்றியை கொண்டாடிக் கொண்டிருக்கும் ஹரிஷ் கல்யாண், நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்தார். மேலும் தான் நடிக்க இருக்கும் படத்தில் ஒரு பகுதியை விட்டுக் கொடுக்கவும் முடிவு செய்துள்ளார் ஹரிஷ் கல்யாண். இந்த கொரோனா சூழலில் அனைவரும் ஒன்றிணைந்து பிரச்சனையை எதிர் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இயக்குநர் ஹரி
இயக்குநர் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் அருவா படத்தில் தனக்கு அறிவித்திருந்த சம்பள பணத்தில் 25% -த்தை விட்டுக் கொடுப்பதாக அறிவித்திருந்தார்.
அருள் தாஸ்
இந்நிலையில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் அருள் தாஸ் தன்னுடைய சம்பளத்தை குறைத்துள்ளார். வருகின்ற டிசம்பர் மாதம் வரை தான் நடிக்கும் எந்த படத்திற்கும் சம்பளம் வேண்டாம் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
நான் மகான் அல்ல, சூது கவ்வும் போன்ற முக்கியமான படங்களில் அவர் நடித்திருந்தார். நான் திரைத்துறையில் நடிகனாக நீடித்து இருப்பதற்கு காரணம் எனது இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள், தயாரிப்பு நிர்வாகிகள் மற்றும் திரைத்துறை நண்பர்கள்தான். நடிக்க வைத்தது இயக்குநர்கள் என்றாலும் தயாரிப்பாளர்கள் தான் முதலாளிகள்.
கொரோனா வைரஸால் உலக நாடுகள் திண்டாடி கொண்டிருக்கிறது, இந்நிலையில் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. அதனால் முகம் தெரியாத பலருக்கும் என்னால் இயன்றவரை உதவிகளை செய்ய இந்த முடிவை எடுத்துள்ளேன் என்று அவர் கூறியுள்ளார்.
நடிகை ஆர்த்தி
நகைச்சுவை நடிகை ஆர்த்தி தன்னுடைய சம்பளப் பணத்தை ஒரு ரூபாயாக குறைத்துள்ளார். மேலும் தனக்காக தயாரிப்பாளர்கள் ஒரு பட்ஜெட் வைத்திருக்கும் பட்சத்தில் அந்த பணத்தை திரைத்துறை தொழிலாளர்கள் மற்றும் இதர கலைஞர்களுக்கு பங்கிட்டு தருமாறு வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil