ரஜினிகாந்த் நடிப்பில பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாக உள்ள ஜெயிலர் படத்தின் சிறப்பு காட்சி இல்லாத நிலையில், தமிழகத்தில் படம் காலை 9 மணிக்கு திரையிடப்படும் என்ற செய்தி ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகியுள்ள படம் ஜெயிலர். நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெரப் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில், சன்பிச்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்து படத்தின் டிரெய்லர் வெளியாக உள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 10-ந் தேதி ஜெயிலர் படம் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் அதிகாலை 12 மணி, 2 மணி, விடியற்காலை 4 மணி ஆகிய ஷோக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் ஜெயிலர் படம் காலை 9 மணிக்கு திரையிடப்பட உள்ளது. ஆனால் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில், அதிகாலை 6 மணிக்கு காட்சிகள் திரையிடப்பட உள்ளது. இதனால் தமிழகத்தில் படம் வெளியாகும் முன்பே படத்தின் விமர்சனங்கள் இணையத்தில் வெளியாகிவிடும்.
இதனால் தமிழக ரசிகர்கள் படத்தை அனைத்து மாநிலத்திலும் ஒரே நேரத்தில் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதை விட வெளிநாடுகளில் இந்திய நேரப்படி நள்ளிரவில் ஜெயிலர் படம் வெளியாக உள்ளதும் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது இது தொடர்பாக தங்களது ஏமாற்றத்தை சமூகவலைதளங்களில் வெளிப்படுத்தி வரும் ரசிகர்கள் தமிழகத்தில் ஜெயிலர் படம் திரையிடப்படும் நேரத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், படத்திற்கான ப்ரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் டிரெய்லர் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“