2 வருட இடைவெளிக்கு பிறகு வெளியாகும் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், படத்திற்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த், அண்ணாத்த படத்திற்கு பிறகு தற்போது நெல்சல் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்ற படத்தில் நடித்துள்ளார். ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், யோகி பாபு, சுனில், விநாயகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை சன்பிச்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்மாக தயாரித்துள்ளது.
அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், கடந்த வாரம் வெளியான ஜெயிலர் படத்தின் டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதனிடையே சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 10-ந் தேதி வெளியாக உள்ள ஜெயிலர் படத்தின் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது.
இதனிடையே முன்னணி நடிகர்களின் படங்களுக்கு வழங்கப்படும் ரசிகர் ஷோ அனுமதி தற்போது அரசாங்கத்தால் மறுக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் ஜெயிலர் படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் மற்ற மாநிலங்களில் காலை 6 மணிக்கே தொடங்கும் என்பதால் தமிழக ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். ஆனாலும் ரசிகர்களுக்காக அரசு அதிகாலை காட்சிக்கு அனுமதி அளிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து திரைப்பட ஆய்வாளர் ஒருவர் கூறுகையில், இன்று அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதற்கு பாதுகாப்பு தான் காரணம். விளம்பரம், மற்றும் கட்டவுட்கள் வைப்பது தொடர்பாக ரசிகர்கள் இறப்பு ஏற்படுவதாக செய்திகள் வெளியாகிறது. இதனால் கூட்டத்திற்கு அதிக பாதுகாப்பு தேவைப்படுகிறது. அதிகாலை காட்சிகள் நிச்சயமற்ற தன்மை நிலவி வருவதால் தற்போது அனுமதி மறுக்கப்படுள்ளதாக கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“