தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள படம் ஜெயிலர். சுதந்திர தின விடுமுறையை குறி வைத்து கடந்த ஆகஸ்ட் 10-ந் தேதி வெளியான இந்த படம் ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரும் கொண்டாடும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறி வருகின்றனர்.
இதனிடையே ஜெயிலர் படம் வெளியான 3 நாட்களில இந்தியாவில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. முதல் நாளில் இப்படம் 48.35 கோடி வசூல் செய்தது. அதைத் தொடர்ந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது நாட்களில் முறையே ரூ.25.75 கோடி மற்றும் ரூ.35 கோடிகளை வசூலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வாரிசு, துணிவு, விக்ரம் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் வசூலை முந்தியதாகவும் கூறப்படுகிறது.
சுதந்திர தின விடுமுறையை குறி வைத்து வெளியான ஜெயிலர் படம், தற்போதுவைர ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக்கொண்டிருப்பதாகவும், வரும் ஆகஸ்ட் 15-ல் தமிழகம் முழுவதும் அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ்ஃபுல் டிக்கெட்டுகள் ரிசர்வ் முடிந்துவிட்டதாக திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், ஜெயிலர் படம் கமர்ஷியல் ஹிட் அடித்துள்ளது. சென்னையில் இருந்து போன் செய்து என்னிடம் பலர் படத்திற்கு டிக்கெட் வாங்கி தரும்படி கேட்கின்றனர். அதேபோல் நேற்று மைசூரில் இருந்து எனக்கு போன் செய்து பேசினார்கள். அங்கு முதல் முறையாக கன்னடம் தமிழ் என இரு மொழிகளிலும் ஜெயிலர் படம் வெளியாகியுள்ளது. இந்த படம் கர்நாடகாவில் ரெக்கார்டு பிரேக் பண்ணும் என்று சொன்னார்.
கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு சாதனைகள் இருப்பது போல், ஜெயிலர் படம் முதல் வார வசூல் தமிழ் சினிமாவின் சாதனையாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த படத்தின் ரெஸ்பான்ஸ் அதிகமாக இருக்கு. தமிழகத்தில் கிட்டத்தட்ட 900 ஸ்கிரீன்களில் இந்த படம் வெளியாகியுள்ளதும் வசூலில் சாதனை படைக்க ஒரு முக்கிய காரணமாக உள்ளது. போட்டிக்கு படங்கள் எதுவும் இல்லாமல் தனியாக வெளியாகியுள்ளதும் ஒரு காரணம்.
அதேபோல் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் என இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இருக்கும் மல்டிஸ்டார் படம். தமன்னாவின் காவாலா பாடல் என இந்த படத்தின் வசூல் வேட்டைக்கு பல காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். அனிருத்க்கு இளைஞர்கள் அதிகம் ரசிகர்களாக இருப்பதால் அவரது பாடலுக்காகவே படம் பார்க்க ரசிகர்கள் வருகின்றனர்.
ஒரு படம் வெற்றியடைய அனைத்து காரணங்களும் இந்த படத்தில் இருப்பதால், ஜெயிலர் தமிழ் சினிமாவின் முதல் வார வசூல் ரெக்கார்டு பிரேக்கிங்காக இருக்கும் என்று திருப்பூர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil