ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில், ஒரு சில நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு ஆகஸ்ட் 10-ந் தேதி விடுமுறை அளித்து ஜெயிலர் படத்தின் டிக்கெட்டுகளை இலவசமாக வழங்கி வருகின்றனர்.
அண்ணாத்த படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்னர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை சன்பிச்சர்ஸ் நிறுவனம் பிரம்மாணமாக தயாரித்துள்ள நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜெயிலர் படம் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 10) வெளியாக உள்ளது.
இதனிடையே படத்தின் ப்ரமோஷன் பணிகளில் படக்குழு மற்றும் ரசிகர்கள் என பலரும் தீவிரமாக களமிறங்கியுள்ள நிலையில், பான் இந்தியா படமாக வெளியாகும் ஜெயிலர் வசூலில் பல சாதனைகளை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே முன்பதிவு தொடங்கிவிட்ட நிலையில், பல இடங்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே ஜெயிலர் படத்தின் ரிலீஸை தொடர்ந்து சென்னை மற்றும் பெங்களூரில் உள்ள அலுவலகங்கள் தங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு இலவச டிக்கெட்டுகளையும் வழங்கியுள்ளன. இது தொடர்பாக ஒரு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த அறிவிப்பில், எச்.ஆர் டிபார்ட்மெண்டில் குவிந்து கிடக்கும் விடுமுறை கோரிய விண்ணப்பத்தை தவிர்ப்பதற்காக ஆகஸ்ட் 10-ஆம் தேதி விடுமுறை அறிவித்ததாக நிறுவனம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது. மேலும் அந்த அறிவிப்பில், "ஊழியர்களுக்கு இலவச டிக்கெட்டுகளை வழங்குவதன் மூலம் படம் ஆன்லைனில் வெளியாவதை ஆதரிக்கும் மனப்பான்மையை போக்கும் வழியாக இருக்கும் என்று கூறியுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“