சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 10-ந் தேதி ஜெயிலர் படம் வெளியாக உள்ள நிலையில், அதே சுதந்திர தின விடுமுறையை குறி வைத்து மற்ற மொழி படங்களும் வரிசைகட்டி காத்திருப்பதால் இந்திய பாக்ஸ்ஆபீஸில் அதிக வசூல் யாருக்கு என்ற போட்டி ஏற்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், உருவாகியுள்ள படம் ஜெயிலர். நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் ரஜினிகாந்துடன் ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராப், விநாயகன், யோகி பாபு உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். அனிருத் இசைமைத்துள்ள இந்த படத்தை சன்பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 10-ந் தேதி ஜெயிலர் படம் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. அதே சுதந்திர தின விடுமுறையை குறி வைத்து, பாலிவுட்டில் அக்ஷைகுமாரின் ஓஎம்ஜி 2, சன்னி தியோலின் கதார் 2, மற்றும் சிரஞ்சீவியின் போலா சங்கர் உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளதால் இந்திய பாக்ஸ்ஆபீஸில் எந்த படத்திற்கு அதிக வசூல் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் மட்டும் வரும் ஆகஸ்ட் 10-ந் தேதியே வெளியாக உள்ளது. மற்ற படங்கள் அடுத்த நாள் (ஆகஸ்ட் 11) வெளியாக உள்ளதால், ஒரு நாள் முன்னதாக வெளியாகும் ஜெயிலர் படத்திற்கு இந்தியாவின் முக்கிய பகுதிகளில் வரவேற்பு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சன் பிச்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள ஜெயிலர் படத்தை ரெட் ஜெயிண்ட் நிறுவனம் வெளியிடுகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை சன்பிச்சர்ஸ் – ரெட் ஜெயிண்ட் ஆகிய 2 நிறுவனங்களுமே அரசியல் ரீதியாகவும் திரைத்துறையிலும் முன்னணியில் இருப்பதால், ஜெயிலர் படத்திற்கு செல்வாக்கு அதிகம் இருக்கும். அது மட்டுமல்லாமல் ஜெயிலர் படத்திற்கு ஏற்பட்டுள்ள பெரிய எதிர்பார்ப்பு காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்கிலும் ஜெயிலர் படத்தை திரையிட வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், ஜெயிலர் படத்தின் வெளியீடு குறித்து சினிமா விமர்சகர் ஒருவர் கூறுகையில், இது சன்பிச்சர்ஸ் படம். அதனால் ஓடிடி உரிமைகள், வெளிநாட்டு உரிமைகள், டிஜிட்டல் உரிமைங்கள் என அனைத்து நல்ல வசூலை கொடுத்திருக்கும் இது தொடர்பான அதிகாரப்பு விரைவில் வெளியாகும் என்று கூறியுள்ளார்.
அதே போல் விளம்பர ஜாம்பவானான சன் பிச்சர்ஸ் ஜெயிலர் படத்தை தயாரித்திருப்பதால், வியாபாரத்திற்கு பிரச்சனை இருக்காது. மேலும் இது ரஜினி படம் என்பதால், ரெட் ஜெயிண்ட் நிறுவனம் இந்த படத்தின் மீது கூடுதல் கவனம் செலுத்தும் அதனால் படத்தின் வசூல் அதிகரிக்கதான் வாய்ப்புகள் உள்ளது என்று மற்றொரு சினிமா விமர்சகர் கூறியுள்ளார்.
இதனிடையே ஜெயிலர் படம் வெளியாகும் அடுத்த நாள் பாலிவுட்டில் ஓஎம்ஜி 2 மற்றும் கதார் 2 ஆகிய படங்கள் ஆகஸ்ட் 11-ந் தேதி வெளியாக உள்ளதால் வட இந்தியாவில், ஜெயிலர் படத்திற்கான அட்வான்ஸ் புக்கிங், மற்றும் ஷோக்களின் எண்ணிக்கை பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. அதேபோல் சிரஞ்சீவியின் போலா சங்கர் படமும் ஆகஸ்ட் 11-ந் தேதி வெளியாக உள்ளதால், தெலுங்கானா மற்றும் ஆந்திராவில், ஜெயிலர் படத்திற்கு கடும் போட்டி ஏற்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“