சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த "ஜெயிலர்" திரைப்படம் தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதேபோல திருச்சியில், கரூர் பைபாஸ் சாலையில் உள்ள கே.டி என்கிற கோகினூர் எல்.ஏ சினிமாஸ் திரையரங்கில் நேற்று (17-8-23 ) மாலை காட்சி ஓடிக்கொண்டிருந்தது. படம் இடைவேளை வரை படம் நன்றாக ஓடிக்கொண்டிருந்த நிலையில் அதற்க்கு பிறகு அவ்வப்போது, திரையிடப்படுவதில் தொடர்ந்து தடை ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் 10 - 15 நிமிடத்திற்கு மேலாகியும், "ஜெயிலர்" திரைப்படம் ஒளிபரப்பு தாமதமானதால், ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் கூச்சலிட்டனர். உடனே தியேட்டர் ஊழியர்கள் திரையரங்கிற்குள் வந்து, தொழில்நுட்ப கோளாறு காரணமாக காட்சி திரையில் வரவில்லை, இது சரியாக இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் என்று கூறி ரசிகர்களை சமாதானப்படுத்த முயன்றனர். இதனை ரசிகர்கள் ஏற்காததால் மீண்டும் கூச்சல் - குழப்பம் ஏற்பட்டது.
அப்போது தியேட்டர் ஊழியர்கள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் உங்களது கட்டணத்தை திருப்பி கொடுத்துவிடுகிறோம் என்று கூறியதன் பேரில் சமாதானம் அடைந்த அவர்கள் கட்டணத்தை திரும்ப பெற சென்றனர். அங்கு முட்டல், மோதல் ஏற்பட்டது. ஆனாலும் ரசிகர்களுக்கு, தியேட்டர் நிர்வாகம் சொன்னமாதிரி டிக்கெட் பணத்தை ரீபண்ட் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், எல் ஏ சினிமாவில் படம் பார்த்த ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இது குறித்து ரசிகர் ஒருவர் கூறுகையில்.,
"என் வாழ்நாளில் இப்படி ஒரு சம்பவம் இதுவரை நடந்ததில்லை. படத்தை முழுமையாக பார்க்க முடியாததால் குடும்பத்துடன் ஏமாற்றம் அடைந்தோம். மேலும், கோஹினூர் எல்.ஏ சினிமாஸ் தியேட்டரில் கழிவறை 1% அளவுக்குகூட சுத்தமாக இல்லை. இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அவர்கள், சுகாதாரத்துறையினருடன் இணைந்து, திடீரென்று ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினர். திருச்சியில் ஜெயிலர் திரைப்படம் பாதியில் நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil