பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான படங்கள், தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருந்ததால், கடந்த வாரம் தமிழ் சினிமாவில் புது படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், இந்த வாரம் 6 தமிழ் படங்கள் வெளியாக உள்ளது.
குடும்பஸ்தன்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவராக இருக்கும் மணிகண்டன், தொடர்ந்து நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார், அந்த வகையில் அவர் நடித்த குட்நைட், லவ்வர் ஆகிய படங்கள் பெரிய வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது குடும்பஸ்தன் என்ற படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பாட்டில் ராதா
தமிழ் சினிமாவில், நடிப்பு திறமையுடன் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருக்கும், குரு சோமசுந்தரம் நடிப்பில் தயாராகியுள்ள படம் பாட்டில் ராதா. மது பழக்கம் ஒரு குடும்பத்தை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
குழந்தைகள் முன்னேற்ற கழகம்
கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சங்கர் தயாள், இயக்கியுள்ள படம் குழந்தைகள் முன்னேற்ற கழகம். யோகி பாபு முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிக்கு வரும்போது, இயக்குனர் சங்கர் தயாள் மரணமடைந்த நிலையில், இந்த படம் இன்று வெளியாக உள்ளது.
மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்
யூடியூப்பர் ஹரி பாஸ்கர் நடிப்பில் தயாராகியுள்ள படம் மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங். காமெடி காட்சிகள் நிறைந்த இந்த படம் இன்று வெளியாகியுள்ளது. படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்தது.
வில்லான்
சுந்தர். சி நடிப்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தயாரான வில்லான் திரைப்படம், இன்று வெளியாக உள்ளது. த்ரில்லர் பாணியில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியான நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது,
பூர்வீகம்
போஸ் வெங்கட், இளவரசு, பசங்க சிவக்குமார், சங்கிலி முருகன் ஆகியோர் நடிப்பில் தயாராகியுள்ள படம் பூர்வீகம். கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இந்த படம் வெளியீட்டுக்கு முன்பே பாராட்டுக்களை பெற்று வருகிறது.
தமிழ் திரைப்படங்களை இயக்கி வந்த கௌதம் மேனன், மலையாளத்தில் இயக்குனராக அறிமுகமாகியுள்ள, டோமினிக் தி லேடீஸ் பர்ஸ் என்ற திரைப்படமும் இன்று வெளியாக உள்ளது.