எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட நடிகர்கள் தொடங்கிய இன்றைய நடிகர் சிம்பு வரை தமிழ் சினிமாவில் 5 தலைமுறை நடிகர்களுக்கு தனது பாடலின் மூலம் ஹிட் கொடுத்த கவிஞர் வாலி, இந்தி ரீமேக் டியூனுக்கு பாடல் எழுத திணறியபோது, ஜெயலலிதா அவருக்கு வரிகள் வர காரணமாக இருந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தனது வாழ்நாளின் இறுதிவரை வாலிப கவிஞர் என்று போற்றப்பட்டவர் கவிஞர் வாலி. கண்ணதாசனுக்கு போட்டியாக தமிழ் சினிமாவில் பாடல் எழுத வந்த இவர், பின்னாளில் கண்ணதாசன் தனது வாரிசு என்று அறிவிக்கும் அளவுக்கு தனது பாடல்கள் மூலம் உச்சம் தொட்டவர் தான் வாலி. எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கும், கே.பாலச்சந்தர் முதல் ஷங்கர் வரை முன்னணி இயக்குனர்களுக்கும் பாடல்கள் எழுதிய பெருமை கொண்டவர்.
அதேபோல், படம் இயக்குவதில் உச்சம் தொட்டவர் தான் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர். இவரது இயக்கத்தில், கடந்த 1966-ம் ஆண்டு வெளியான படம் தான் மேஜர் சந்திரகாந்த். மேஜர் சுந்தர் ராஜன், நாகேஷ், முத்துராமன், ஏ.வி.எம்.ராஜன், ஜெயலலிதா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு, வி.குமார் இசையமைத்திருந்தார். படத்திற்கு ஒரு பாடலை தவிர மற்ற அனைத்து பாடல்களையும் கவிஞர் வாலி எழுதியிருந்தார்.
இந்த படத்திற்கான ஒரு பாடலை கம்போசிங் செய்யும்போது, இசையமைப்பாளருக்கு கிட்டார் டான்கோ என்ற இசை தட்டுவை ப்ளே செய்து காட்டிய ஏ.வி.எம்.குமரன், இதேபோன்ற ஒரு பாடல் வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்பிறகு அந்த இசையை தமிழுக்கு ஏற்றவாறு சிறிது மாற்றம் செய்து வி.குமார் இசையமைக்க, டியூனை கேட்ட வாலி, இதற்கு எப்படி வார்த்தைகள் போடுவது என்று எனக்கு தெரியவில்லை என்று சொல்லிவிட்டு சில நிமிடங்கள் அமைதியாக இருந்துள்ளார்.
அதன்பிறகு, எனக்கு இது சரியாக வரவில்லை. கொஞ்சம் ப்ரஷ்னஸ் தேவை. வெளியில் அப்படியே போய்விட்டு வருவோமா என்று கேட்க, ஏ.வி.எம்.குமரன், ஷூட்டிங் பார்க்க வாலியை அழைத்து சென்றுள்ளார். மேஜர் சந்திரகாந்த் படப்பிடிப்பில், ஜெயலலிதா நடிக்கும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அப்போது திடீரென எனக்கு ஐடியா வந்துவிட்டது. வாங்க கம்போசிங் போகலாம் என்று சொல்லி, ஏ.வி.எம். குமரனை அழைத்துக்கொண்டு கம்போசிங் ரூமுக்கு வந்துள்ளார் வாலி.
உடனடியாக இந்த வார்த்தைகள் டியூனுக்கு பொருந்துகிறதா என்று பாருங்கள் என கூறி ‘’நேற்று நீ சின்ன பாப்பா, இன்று நீ அப்பப்பா’’ என்று கூறியுள்ளார். இதை கேட்ட இசையமைப்பாளரும் சரியாக இருக்கிறது என்று சொல்ல, பாடல் ஓகே ஆகிறது. இதை பார்த்து வியந்த ஏ.வி.எம்.குமரன், எங்கிருந்து இந்த வார்த்தையை பிடித்தீர்கள் என்று கேட்க, படப்பிடிப்பில் நடித்துக்கொண்டிருந்த ஜெயலலிதா 16-18 வயதில், பள்ளியில் யூனிஃபார் அணிந்து கொண்டு சென்றதை பார்த்தேன்.
அப்போது யூனிஃபார்மில் பார்த்த அந்த ஜெயலலிதாவா இப்படி நடித்துக் கொண்டு இருக்கிறார். என்னால் நம்ப முடியவில்லை. அது தான் இந்த பாடல் என்று கூறியுள்ளார். இந்த பாடல் வெளியாகி பெரிய வெற்றி பெற்றிருந்த நிலையில், இன்றும் இந்த பாடல் பல படங்களில் ஹீரோ ஹீரோயினை பார்த்து பாடும் பாடலாக வலம் வருகிறது.