ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ்,யோகி பாபு நடிப்பில் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் "சைரன்" படத்தின் முழு விமர்சனம்
கதைக்களம் :
கொலை பழியை சுமந்துகொண்டு சிறையில் இருக்கும் திலகன் வர்மன் (ஜெயம் ரவி) உடல்நிலை சரியில்லாத தந்தையைப் பார்க்க பரோலில் வெளியே வருகிறார். திலகன் வர்மன் வெளியே வந்த நேரத்தில் சில கொலைகள் நடக்கிறது, இதை திலகன் செய்திருப்பாரோ? என்ற சந்தேகம் போலீஸ் அதிகாரியான நந்தினிக்கு(கீர்த்தி சுரேஷ்) ஏற்படுகிறது. இதன்பிறகு என்ன நடக்கிறது என்பதை எமோஷனல் கலந்து சொல்லும் படமே ‘சைரன்’.
நடிகர்களின் நடிப்பு :
இளம் தோற்றம், வயதான தோற்றம் என இரு வேறு பரிமாணங்களில் நடிப்பில் மிரட்டுகிறார் ஜெயம் ரவி.ஆம்புலன்ஸ் ஓட்டுநராக அவரின் வேகமும், பரோலில் வந்த பிறகு இருக்கும் முதிர்ச்சியும் அவரது நடிப்பின் எதார்த்தத்தை ரசிகர்களுக்கு அழகாக கடத்துகிறது. குறிப்பாக மகளுடனான பாசப்போராட்டத்தில் நெகிழ வைக்கிறார். திமிராகவும், கம்பீரமாகவும் போலீசாக கச்சிதமாக பொருந்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
யோகிபாபு தன் வழக்கமாக காமெடி காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார். அனுபமா பரமேஸ்வரன், சாந்தினி, சமுத்திரக்கனி, யுவினா, அழகம் பெருமாள் என அனைவரின் பங்களிப்பும் சிறப்பு
இயக்கம் மற்றும் இசை :
வழக்கமான பழிவாங்கல் கதையில் எமோஷன், ஆக்ஷன், காமெடி என ஒருசேர கலந்து பக்கா கமர்ஷியல் பாணியில் கதை சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ். முதல் படம் என்றே தெரியாத அளவிற்கு சிறப்பான மேக்கிங்கில் அசத்தியிருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள். சாம் சி.எஸின் பின்னணி இசை சுமார். ஜி.வி. பிரகாஷின் பாடல்கள் மனதை தொடவில்லை.
படத்தின் ப்ளஸ்
• நடிகர்களின் எதார்த்த நடிப்பு
• கூர்மையான வசனங்கள்
• ஜெயம்ரவி - யோகிபாபு காமெடி காட்சிகள்
• போரடிக்காத கதைக்களம்
• தந்தை - மகள் பாசம்
• ஆக்ஷன் காட்சிகள்
• எடிட்டிங் கட்ஸ்
படத்தின் மைனஸ்
• ஒட்டாத எமோஷனல் காட்சிகள்
• சுவாரசியம் குறைந்த திரைக்கதை
• பலவீனமான வில்லன்கள்
• ஈர்க்காத பாடல்கள்
மொத்தத்தில் பழிவாங்கும் பழைய திரைக்கதை தான் என்றாலும், இன்றைய வெகுஜன மக்களை குடும்பத்துடன் ஓரளவிற்கு இந்த "சைரன்" ரசிக்க வைக்கிறது
நவீன் சரவணன்